Home உலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு: இலங்கை அரசு அறிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு: இலங்கை அரசு அறிக்கை

0

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர பிரித்தானியா (United Kingdom) எடுத்த முடிவை இலங்கை வரவேற்றுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியாவில் தொடரும் என்றும் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் (United Kingdom) தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான தடை

பிரித்தானியாவின், மேல் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற மூத்த இராஜதந்திரிகளின் தலைமையில் நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட சுயாதீன நீதிமன்றமான, தடைசெய்யப்பட்ட அமைப்பு முறையீடுகள் ஆணைக்குழு இந்த தீர்ப்பை அறிவித்துள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

வட கிழக்கு இலங்கையில் சுதந்திர தமிழ் அரசை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமே, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு பிரித்தானியாவிடம் விண்ணப்பித்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

சர்வதேச வலையமைப்பின் அணுகுமுறை

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானியாவில் தடை செய்யப்படவில்லை. அது வன்முறையற்ற வழிமுறைகளின் மூலம் அரசியல் மற்றும் கருத்தியல் நோக்கங்களைத் தொடர முயற்சிக்கும் காரணத்தினால் அதனை அந்த நாடு தடை செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் அணுகுமுறையும் மூலோபாயமும், வெளிநாட்டு அரசாங்கங்களை விடுதலைப் புலிகளின் தடையை நீக்கச் செய்வதன் மூலம் அந்த அமைப்பை புத்துயிர் பெறச் செய்வதாகும் என வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version