இலங்கையின் மூன்று முன்னாள் இராணுவத் தலைவர்கள் உட்பட நான்கு பேர் மீது பிரித்தானியா விதித்த தடைகள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க அமைச்சர்கள் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு நபர்கள் மீது தடைகளை விதித்துள்ளதாக பிரித்தானிய அரசு மார்ச் 24 அன்று அறிவித்தது.
அதன்போது, இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தலைவர் ஷவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணகோடா, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜெயசூர்ய மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் இராணுவத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மான் ஆகியோருக்கு பிரித்தானியாவினால் தடை விதிக்கப்பட்டது.
பிரித்தானிய அரசாங்கம்
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது, சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும்/அல்லது பாலியல் வன்முறை போன்ற பல்வேறு மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பான நபர்களை இலக்காகக் கொண்டு, பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கங்கள் உள்ளிட்ட இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பான பரிந்துரைகளை பெறுவதற்கு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
