Home இலங்கை அரசியல் கிராமமாக மாறும் தோட்டப்புறங்கள்! சம்பளமும் வீடும் எங்கே – சபையில் மனோ கேள்வி

கிராமமாக மாறும் தோட்டப்புறங்கள்! சம்பளமும் வீடும் எங்கே – சபையில் மனோ கேள்வி

0

சம்பளம் 1,700 என்றார்கள் அது இன்னமும் இழுபறி. ரூ.1,000 சம்பளமே முழுமையாக கிடைப்பது இல்லை. சில இடங்களில் அரை பேர் போட்டு ரூ. 500 தரப்படுகிறது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சம்பளமும் இல்லை வீடும் இல்லை

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவர்களின் ஏகப்பட்ட முறை கேடுகள், தில்லு முல்லுகள், மோசடிகள் காரணமாக இந்திய வீட்டு திட்டம் தாமதம் ஆகி விட்டது. பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வழங்கிய 10,000 வீட்டு திட்ட உறுதி மொழியை நாம் ஆட்சிக்கு வந்து நிறைவேற்றி வைப்போம்.

10 பேர்ச் காணி தருகிறேன் என்றார்கள். அதற்கு 4,000 மில்லியன் அதாவது, 400 கோடி ஒதுக்கி உள்ளேன் என்றும் சொன்னார்கள். இன்று, காணியையும் காணோம். காணிக்கு ஒதுக்கிய பணத்தையும் காணோம்.

ஆகவே சம்பளமும் இல்லை. வீடும் இல்லை. காணியும் இல்லை.  நீங்கள் எமது மக்களுக்கு ஒன்றும் தரவில்லை.

இப்போது  தேர்தலை அறிவிக்க தேர்தல் ஆணையகத்துக்கு அதிகாரம் வர இன்னும் ஐந்தே நாட்கள் இருக்கும் போது, தோட்ட லயன்களை “கிராமம்” என்று அறிவிக்க போகிறோம் என்று சொல்கிறீர்கள். இது தேர்தல் குண்டு மாத்திரம் அல்ல, நமது மக்களுக்கு காணி வழங்காமல், தொடர்ந்தும் அவர்களை ஒதுக்க பட்ட மக்களாக மலை உச்சிகளில், இருநூறு ஆண்டுகளுக்கு பிறகும், பழங்குடி மக்களாக, வைக்க முனையும் சமூக அநீதி.

எனது கொழும்பு தொகுதி அவிசாவளை புவக்பிட்டிய பென்ரித் தோட்ட கருங்காலி பிரிவில் தீ விபத்து நிகழ்ந்தது. நான் உடனடியாக எனது பாமன்கடை வீட்டில் இருந்து கிளம்பி, புவக்பிடியவுக்கு ஒரு மணித்தியாலயத்தில் சென்றேன். ஆனால், புவக்பிட்டியவில் இருந்து கருங்காலி மலை உச்சிக்கு செல்ல எனக்கு எனது ஜீப் வாகனத்தில் ஒன்றரை மணித்தியாலம் ஆகியது.

பென்ரித் தோட்ட கருங்காலி பிரிவுக்கு போய் அங்கே ஒரு வயதான பெண்ணிடம் எப்போது கடைசியாக அவிசாவளை நகருக்கு போனீர்கள் என்று கேட்டேன். போன பொங்கலுக்கு துணி வாங்க போனேன் என்றார். சிலர் அப்படியும் போனதில்லை. இது ஏன்? இது என்ன? நமது மக்கள் ஒதுக்கப்பட்ட மக்களாக மலை உச்சியில் பழங்குடியினர் போல் வாழ்கிறார்கள். இருநூறு ஆண்டுகளாக வாழ்கிறார்கள்.

இது நிறுத்தப்பட வேண்டும்.

எமது மக்களுக்கு உறுதி அளித்த 10 பேர்ச் வதிவிட காணியை சாலை ஓரங்களில் அல்லது சாலைக்கு அண்மையில் வழங்குங்கள். நமது மக்கள் அப்போது தான் தேசிய நீரோட்டத்துக்கு உள்ளே வர முடியும்.

மலைகளில் இருந்து கீழே வந்து சாலை ஓரங்களில் வீடு கட்டி சிங்கள மக்களுடன் கூடி பழகி வாழட்டும். அப்போதுதான், எமது மக்களின் சட்ட பூர்வ குடியுரிமை முழுமை அடைய முடியும். இது தான் எமது முற்போக்கு கூட்டணியின் முற்போக்கு கொள்கை.

இந்த அரசாங்கத்தில் இருக்கும் ஒரு பிற்போக்கு சந்தா சங்கத்துக்கு நமது மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலப்பது அன்றைய முப்பாட்டன் காலம் முதல் பிடிக்காது.

நமது மக்களை எப்போதும் மலை உச்சியிலேயே அடைத்து, சாவி போட்டு மூடி வைத்து விட்டு, பெரும்பான்மை கட்சிகளிடம், நமது மக்களை காட்டி, பேரம் பேசி தம்மை வளர்த்து கொள்வதுதான் இவர்கள் பழக்கம்.

நாங்கள் இந்திய பிரஜைகள் அல்ல. நாம் மலையக இலங்கை பிரஜைகள்.

எமது நோக்கம் நாம் இந்நாட்டில் முழுமையான பிரஜைகள் ஆக வேண்டும். இன்று, சம்பளம், காணி, வீடு எதுவும் தராமல் இந்த அரசு, “மோடி மஸ்தான்” வேலை செய்கிறது. இங்கே “மோடி” என்றால் இந்திய பிரதமர் அல்ல. தமிழில் அப்படி ஒரு மாயாஜாலம் பற்றிய கூற்று இருக்கிறது. அத்தகைய ஒரு மாயாஜால மோடி மஸ்தான் வேலைதான் இந்த தோட்ட லயன்களை “கிராமம்” என்று அறிவிக்கும் லூசு வேலை என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version