Courtesy: Sivaa Mayuri
இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் அமெரிக்கா இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, இலங்கை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அமெரிக்கா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், விடுத்துள்ள ஒரு அறிக்கையில், இந்தத் தேர்தலை, இலங்கையின் ஜனநாயக அமைப்புகளின் வலிமைக்கான சான்று என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆழமான ஒத்துழைப்பு
அமைதியான முறையில் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்திய இலங்கை மக்களை தாம் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஒரு நிலையான, செழிப்பான மற்றும் ஒருங்கிணைந்த சமூகத்தை கட்டியெழுப்ப இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான அர்ப்பணிப்பை, அமெரிக்கா விரிவுபடுத்துவதாகவும், அவர் கூறியுள்ளார்.
அத்துடன் பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் இரண்டு நாடுகளுக்கு இடையே ஆழமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.