நாட்டில் வாகன இறக்குமதி தொடர்பில் மாஃபியா குழுவொன்று செயற்படுவதாக தான் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
பிரபல கார் இறக்குமதியாளர்கள் அடுத்த ஆண்டு முதல் கார்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக கூறி, கார்களின் விலைகளை காட்டும் விளம்பரங்களையும் காட்சிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் உள்ள வாகனங்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்யும் தந்திரமாக இந்த பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் மத்தியில் வாகன இறக்குமதி செய்யப்படும் என்ற எண்ணம் ஏற்படும்.
வாகன உரிமையாளர்கள்
புதிய வாகனங்களை எதிர்பார்க்கும் தனியார் வாகன உரிமையாளர்கள் தாங்கள் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலைக்கு விற்கும் நிலை ஏற்படும்.
இதுவரை வாகன இறக்குமதிக்கு அரசு அனுமதி அளிக்காத நிலையில், அனுமதி கிடைத்தால் சுங்க வரியை அதிகரித்து வாகன இறக்குமதிக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களுக்கு நிவாரணம்
அப்போது நாட்டில் வாகனங்களின் விலை அதிகரிப்பதுடன், குறைந்த விலையில் வாகனங்களை சேகரித்து வைத்திருக்கும் வர்த்தகர்கள் தமது வாகனங்களை அதிக விலைக்கு விற்று பெரும் இலாபம் ஈட்ட வாய்ப்பு ஏற்படும் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப வாகன இறக்குமதியை கட்டுப்பாட்டின்றி அனுமதிக்க முடியாது,
பொது வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதித்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதையே அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என, பேராசிரியர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.