இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்க மாட்டோம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி (Sunil Handunneththi) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன, மத வன்முறைகளைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் இன, மத ரீதியிலான சில பிரச்சினைகள் இருக்கின்றமை உண்மைதான், அவற்றுக்கு நாம் தீர்வு காண்போம்.
ஆயுதப் போராட்டம்
எனினும், அந்தப் பிரச்சினைகளை ஊதிப்பெருக்கும் வகையில், வன்முறைகளைத் தூண்டும் வகையில் எவராயினும் கருத்துக்களை வெளியிட்டால் அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்கமாட்டோம், வேரூன்றியிருந்த தேசிய இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறியதால்தான், வடக்கு மற்றும் தெற்கு இடையேயான உறவு அறுந்தது, பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
அந்த நிலைமை மீண்டும் வர இடமளியோம், புதிய அரசியலமைப்பின் ஊடாகத் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்” என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மேலும் தெரிவித்தார்.