Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுமா..!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுமா..!

0

Courtesy: H A Roshan

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு இலங்கையின் 17ஆவது நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி அன்று இடம்பெறவுள்ளது .

வடகிழக்கில் பல சிறுபான்மை கட்சிகள், சுயேட்சை குழுக்கள் என போட்டியிடுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் இம்முறை அதிகமான வேட்பாளர்கள் களமிறக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களுக்கான பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுமா? என கேள்வி எழுப்பப்படுகிறது.

இதனை சில தமிழ் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் பரப்புரையின் போது இது குறித்து விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர்.

சிறுபான்மை சமூகங்களில் வாக்களிப்பு வீதம்

இலங்கையில் 22 தேர்தல் மாவட்டங்கள் காணப்படுகின்றன.நாடாளுமன்றத்திற்காக மொத்தமாக 225 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

இதில் நேரடியாக 196 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் ஊடாக 29 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்கள் .

இருந்த போதிலும் சிறுபான்மை சமூகங்களில் வாக்களிப்பு வீதம் குறைவாக காணப்படுவதாக தெரியவருகிறது.

இதனால் யாழ்ப்பாணத்தில் ஏழு ஆசனங்கள் இருந்த நிலையில் இம்முறை ஒரு ஆசனம் குறைக்கப்பட்டு ஆறு ஆசனங்களாக மாறியுள்ளது.

இது போன்று கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்களில் ஒரு ஆசனம் குறைக்கப்பட்டு 18 ஆக மாறியுள்ளதுடன் கம்பஹா, களுத்துறை மாவட்டங்களுக்கான குறித்த மேலும் ஒவ்வொரு ஆசனமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதற்கான காரணங்களாக வாக்காளர் பதிவு தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை ,சர்வதேச புலம்பெயர்வு, வாக்களிக்காமை போன்ற பல காரணங்கள் குறித்த ஆசன பங்கீடு குறைவுக்கான காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போக கூடிய சாத்தியம் நிலவி வருகிறது.

தமிழ் கட்சிகளில் இலங்கை தமிழ் அரசு கட்சி , தமிழ் தேசிய மக்கள் முண்ணனி உட்பட பல கட்சிகள் போட்டியிடுகின்றன. இது போன்று ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி, புதிய ஜனநாயக முண்ணனி உட்பட பல பிரதான கட்சிகள் தவிர்ந்த பல சுயேட்சை குழுக்களும் தமிழர் பகுதிகளில் போட்டியிடுவதனால் வாக்குகள் சிதறடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தேர்தல் கள நிலவரம்

திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 3,15,925 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,31,811 முஸ்லிம் வாக்காளர்களும், 97,867 தமிழ் வாக்காளர்களும், 84,263 சிங்கள வாக்காளர்களும், 1163 ஏனைய வாக்காளர்களும் காணப்பகும் நிலையில் நான்கு பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 17 கட்சிகளும் 14 சுயேட்சை குழுக்கள் என 217 அபேட்சகர்கள் இம் முறை 2024ம் ஆண்டில் இடம் பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தற்போது தேர்தல் கள நிலவரம் சூடு பிடித்துள்ள நிலையில் வாக்காளர்களின் வீடுகளுக்கு வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

பல வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் அள்ளி வீசுகிறார்கள் இருந்த போதிலும் ஒரு ஜனநாயக ரீதியான அமைதியான தேர்தலை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கிகளை பெரும்பான்மையாக 113 ஆசனங்களை பெறுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் கூறி வருகின்றார்.

ஆனால் திருகோணமலை , மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மக்கள் மத்தியில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய மக்கள் சக்திக்கு குறைவான வாக்குகளே கிடைக்கப் பெற்றன.

தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்கள் தங்களது உரிமைகளையும் அபிவிருத்திகளையும் இணைந்து கொண்டு செல்லக் கூடிய வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கி பிரதிநிதித்துவத்தை தக்க வைக்கலாம். இது ஒற்றுமையாக செயற்படுவதன் மூலமே பாதுகாக்க முடியும் .

வாக்கு உரிமையினை பயன்படுத்த வேண்டும்

தமிழ் நாட்டில் திருகோணமலையை சேர்ந்த 2000 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் இது போன்று கனடாவில் 500 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரியவருகிறது.

ஆரம்பத்தில் காணப்பட்ட தமிழ் மக்களின் வாக்கு வீதம் தற்போது பன் மடங்கு குறைந்து காணப்படுகிறது எனவே தான் 80 சதவீதமான வாக்குகளை தமிழ் மக்கள் இந்த தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்து தங்களுக்கான மக்கள் பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

திருகோணமலை மாவட்டத்தை பொறுத்த மட்டில் பல மக்களுடைய பிரச்சினைகளாக நில அபகரிப்பு, உரிமை சார் பிரச்சினை என காணப்பகுகிறது.அப்பாவி பொது மக்களின் விவசாய காணிகளை அரச திணைக்களங்கள், பௌத்த விகாரைக்கு என பல காணிகளை அபகரிப்பு செய்துள்ளனர்.

இதனை மீட்க கட்டாயமாக தமிழ் பிரதிநிதித்துவம் தேவை இந்த பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டால் மக்களது உரிமைகள் பறிபோகக் கூடிய வாய்ப்பு உள்ளது.

காலம் காலமாக எந்தொரு அரசாங்கம் மாறி மாறி நாட்டை ஆட்சி செய்தாலும் சிறுபான்மை மக்களுக்கான தீர்வு கேள்விக்குறியாகவே உள்ளது.

இதனை தமிழ் பேசும் சமூகம் உணர்ந்து சரியான பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வாக்கு உரிமையினை பயன்படுத்த வேண்டும்.
ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அநுர அரசாங்கம் வரை நல்லிணக்கம் பொறுப்புக் கூறலை ஏற்றுள்ளனர்.

ஆனாலும் தேசிய இனப் பிரச்சினையின் ஒரு தரப்பாகிய ஈழத்தமிழர்களின் எண்ணங்களை கடந்த கால இலங்கை அரஙாங்கங்கள் உள்வாங்கியிருக்கவில்லை.

இதனை இம்முறை வடக்கு, கிழக்கு மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி சார்பானவர்களுக்கான சிறுபான்மை என்ற எண்ணத்துக்கு அமைய பலத்தை நிரூபித்து ஆசனங்களை கைப்பற்ற வேண்டும் அப்போது தான் பலம் பொருந்திய சக்தியாக சிறுபான்மை தமிழ் கட்சிகள் இருக்கலாம் இல்லாது போனால் நமக்குள் பல பிளவுகள் ஏற்பட்டு வாக்குகள் சிதறடிக்கப்படலாம்.

இம் முறை அதிக வேட்பாளர்கள் சுயேட்சை குழுக்களாக களமிறக்கப்பட்டுள்ளதால் இது உள்ளூயாட்சி மன்ற தேர்தலா நாடாளுமன்ற தேர்தலா என்ற சந்தேகம் எழுகின்றது.

இதனால் ஜனநாயக உரிமைகளுடன் தங்கள் பிரதிநிதிகளை தமிழர் தேசத்தில் பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக பயணித்தால் திருகோணமலை மாவட்டத்தில் இரு தமிழ் பிரதிநிதிகளை பெறலாம் இதற்காக ஒற்றுமையுடன் பயணிப்பதே சாலச் சிறந்தது. 

NO COMMENTS

Exit mobile version