Home இலங்கை அரசியல் ரணிலின் கைது – யூடியூபர் சுதாவை சாடிய எதிர்க்கட்சி எம்.பி

ரணிலின் கைது – யூடியூபர் சுதாவை சாடிய எதிர்க்கட்சி எம்.பி

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) கைது செய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றி யூடியூபர் சுதத்த திலகசிறிக்கு எவ்வாறு முன்கூட்டியே தெரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க  (Chamara Sampath Dassanayake) கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (22.08.2025) நடைபெற்ற அமர்வின் போது வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், “வரலாற்றை மறந்து விட்டு செயற்பட கூடாது. வடக்கு ,கிழக்கு மற்றும் மலையக மக்களின் மனித உரிமைகள் மீறல் பற்றியே பேசப்படுகிறது.

மனித உரிமை

இந்த மாகாணங்களை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் உள்ளவர்களின் மனித உரிமைகளும் மீறப்பட்டுள்ளன.அவை பற்றி எவரும் பேசுவதில்லை.

நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். இது உண்மையா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வாக்குமூலமளிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்னிலையாகினார். ஆனால் அவர் கைது செய்யப்படுவதாக யூடியூபர் சுதா என்பவர் குறிப்பிடுகிறார்.

யூடியூபர் சுதா நீதிபதியா? யாரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு .இவ்வாறானவர்களின் முறையற்ற கருத்துகளுக்கு அரசாங்கமே இடமளித்துள்ளது. இது வெட்கத்துக்குரியதொரு செயற்பாடு.

யூடியூபர் சுதா

நாட்டின் மூன்றாம் பிரஜையான பிரதமர் ஹரிணி அமரசூரிய அண்மையில் பொது நிகழ்வொன்றுக்கு சென்றுள்ளார். அவ்விடத்தில் வைத்து இந்த சுதா என்பவர் பிரதமர் தோளில் தட்டி பேசியுள்ளார்.

இது வெட்கத்துக்குரிய செயற்பாடு. நாட்டின் மூன்றாம் பிரஜையிடம் இவ்வாறான நடந்துக்கொள்வது. நாயுடன் உறங்கினால் உன்னிகளுடன் எழும்ப வேண்டும் என்ற பழமொழி உள்ளது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

மலையக மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மஹிந்த ஆகியோரின் ஆட்சியில் பெருந்தோட்ட மக்களுக்கு பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. 

மலையக மக்கள் ஒருபோதும் எமக்கு ஆதரவளிக்கவில்லை. ஆனால் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளார்கள். ஆகவே மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version