Home இலங்கை ஆலயச் சண்டையைத் தடுத்த முதியவரின் வீடு அடித்து நொறுக்கு! இருவர் தலைமறைவு

ஆலயச் சண்டையைத் தடுத்த முதியவரின் வீடு அடித்து நொறுக்கு! இருவர் தலைமறைவு

0
image

மட்டக்களப்பு, நொச்சிமுனைப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற திருவிழாவின் போது இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தடுத்த முதியவர் ஒருவரின் வீட்டை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உடைத்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (15) பகல் இடம்பெற்றுள்ளதாகக் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், நொச்சிமுனைப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

இதன்போது அங்கு வந்த முதியவர் ஒருவர், ‘ஆலயத்தில் சண்டை பிடிக்கக் கூடாது’ எனக் கூறி மோதலைத் தடுத்தபோது, அவர் கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்தார்.

இந்நிலையில், நொச்சிமுனை இசை நடனக் கல்லூரி வீதியில் வசிக்கும் குறித்த முதியவர் மற்றும் அவரது மனைவி ஆகியோர், நேற்று பகல் 12:00 மணியளவில் வீட்டைப் பூட்டிவிட்டு சமுர்த்தி காரியாலயத்திற்குச் சென்றுள்ளனர்.

அந்தச் சந்தர்ப்பத்தில், கூரிய ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மதில் வழியாகக் குதித்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, அங்குள்ள ஜன்னல்கள் மற்றும் அலுமாரிக் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி வீட்டைச் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

வீடு திரும்பிய உரிமையாளர்கள், வீடு உடைக்கப்பட்டுச் சேதமாக்கப்பட்டிருப்பதைக் கண்டு காத்தான்குடிப் பொலிஸாருக்கு அறிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்ததில் சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளனர். எனினும், அவர்கள் தற்போது தலைமறைவாகி உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடிப் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/the-house-of-the-elder-who-stopped-the-temple-fight-got-smashed-two-people-missing-1781622701

NO COMMENTS

Exit mobile version