ஹிஸ்புல்லா அமைப்பு தனது மூத்த உறுப்பினர்களில் ஒருவர் சனிக்கிழமை(28) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஹிஸ்புல்லாவின் தடுப்பு பாதுகாப்பு சபையின் தலைவரும் அதன் மத்திய குழுவின் முக்கிய உறுப்பினருமான நபில் கௌக் (Nabil Qaouk)நேற்று தமது விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் படைத்துறை முன்னதாக கூறியது.
முக்கிய தலைவர்கள் பலி
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தில் ஹசன் நஸ்ரல்லாவைக் கொன்றபோது, பல்வேறு நிலைகளில் உள்ள 20 ஹிஸ்புல்லா தலைவர்களும் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதன்படி அமைப்பின் தெற்கு முன்னணியின் தலைவரான அலி கராக்கியும்(Ali Karaki) கொல்லப்பட்டவர்களில் அடங்குவார்.
அத்துடன் நஸ்ரல்லாவின் பாதுகாப்புப் பிரிவின் தலைவரான இப்ராஹிம் ஹுசைன் ஜாஜினி(Ibrahim Hussein Jazini) மற்றும் “நஸ்ரல்லாவின் நீண்டகால நம்பிக்கைக்குரியவர் மற்றும் ஆலோசகர்” என்று இஸ்ரேல் படைத்துறை விவரிக்கும் சமீர் தவ்பிக் திப்(Samir Tawfiq Dib) ஆகியோரையும் கொன்றதாக இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
நஸ்ரல்லாவின் உடல் மீட்பு
ஹிஸ்புல்லாவின் தலைமையகம் பொதுமக்களின் கட்டிடங்களுக்கு நடுவில் அமைந்திருந்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் வான் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து ஹசன் நஸ்ரல்லாவின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவ ஆதாரம் மற்றும் பாதுகாப்பு ஆதாரத்தை மேற்கோள் காட்டி,அவரது உடலில் “நேரடி காயங்கள்” இல்லை என்று ரொய்ட்டர்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.