இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்(CIABOC) 3,937 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, இவற்றில் 1,011 முறைப்பாடுகள் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் மற்றும் அவை லஞ்சச் சட்டத்தின் எல்லைக்குள் வராததால் விசாரணையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அதே ஏழு மாத காலத்திற்குள் லஞ்ச சம்பவங்கள் தொடர்பான சோதனைகளின் போது 49 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகள்
அதில் 15 அரசு நிறுவனங்களில் பல்வேறு பதவிகளை வகிக்கும் 41 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் என்றும், 17 காவல்துறை அதிகாரிகள் காவலில் எடுக்கப்பட்டனர் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
இதேவேளை, ஆணைக்குழுவின் கண்டுபிடிப்புகளின்படி, நீதி அமைச்சு, சுகாதார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட பிற அரசு நிறுவனங்களிலிருந்தும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள்
அத்தோடு, சோதனைகளின் போது கைது செய்யப்பட்டவர்களைத் தவிர, பிற வகையான விசாரணைகள் மூலம் மேலும் 39 நபர்கள் காவலில் எடுக்கப்பட்டனர்.
ஆணைக்குழுவின் எட்டு பக்க அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி, கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர்கள், அமைச்சக செயலாளர்கள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் வைத்திய நிபுணர்களும் அடங்குவர்.
