Home இலங்கை அரசியல் கட்டைப்பறிச்சான் தெற்கு இறால் பாலம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அனுப்பியுள்ள கடிதம்

கட்டைப்பறிச்சான் தெற்கு இறால் பாலம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அனுப்பியுள்ள கடிதம்

0

மூதூர்(Mutur) –
கட்டைப்பறிச்சான் ஆற்றிற்குக் குறுக்காக உள்ள பாலத்தை உடனடியாக
புனரமைக்குமாறு கோரி பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
அமைச்சர் ஏ.எச்.எம்.எச் அபயரத்னவுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி
கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம் ஒன்றை
அனுப்பிவைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மூதூர் பிரதேச செயலர் பிரிவில் கட்மைப்பறிச்சான் தெற்கு கிராம சேவகர் பிரிவில்
கட்டைப்பறிச்சான் ஆற்றிற்குக் குறுக்காக இந்த இறால் பாலம் அமைந்துள்ளது.

 அதிகமான மக்கள் பயன்பாடு

வீதி
அபிவிருத்தித் திணைக்களத்திற்குச் சொந்தமானதும் சுமார் 125 மீற்றர்கள்
நீளமானதுமான இப்பாலமானது கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்னர் கொங்கிறீட் குழாய்கள்
பொருத்தப்பட்டு அமைக்கப்பட்டதாகும்.

மூதூரிலிருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் மிகப் பழமையானதும் அதிகளவு
மக்களது பயன்பாட்டில் உள்ளதுமான பழைய மட்டக்களப்பு வீதியிலேயே இப்பாலம்
அமைந்துள்ளது.

சேருவில, தோப்பூர், பாட்டாளிபுரம், நல்லூர், மலைமுந்தல்,
பள்ளிக்குடியிருப்பு போன்ற கிராம மக்கள், பாடசாலை மாணவர்கள், வியாபாரிகள், அரச
உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கானோர் தினமும் இப்பாலம் ஊடாகவே
அடிக்கடி மூதூருக்கும் ஏனைய பல பகுதிகளுக்குமான பிரயாணத்தை மேற்கொண்டு
வருகின்றார்கள்.

கட்டைப்பறிச்சான், சேனையூர், கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள சந்தனவெட்டை,
அறபாநகர், அம்மன்நகர், கணேசபுரம் ஆகிய இடங்களிலுள்ள நெல்வயல்கள், குளங்கள்,
சேனைப்பயிர்ச் செய்கை நிலங்கள் மற்றும் காட்டுப்பகுதிகளுக்குச் செல்லும்
பாதையிலுள்ள மிக முக்கிய பாலமாகவும் கட்டைப்பறிச்சான், சேனையூர் பகுதி மக்கள்
கிராமத்தை விட்டு வெளியேறுவதற்கான பிரதான பாதையாகவும், மூன்று கிராம சேவகர்
பிரிவுகளில் வசிக்கும் சுமார் 3000 திற்கும் அதிகமான மக்களது பயன்பாட்டிலுள்ள
பொது மயானம் மற்றும் பொது விளையாட்டு மைதானம் ஆகியவற்றிற்குச் செல்லும் பிரதான
வழியில் இப்பாலம் அமைந்துள்ளது.

இறால் பாலம்

இவ்வாறான மிக முக்கியமான போக்குவரத்துப் பாதையில் அமைந்துள்ள இந்த இறால்
பாலமானது கடந்த 20 வருடங்களாக திருத்தப்படாத நிலையில் மோசமாகப் பாதிப்படைந்த
நிலையிலுள்ளது.

இதனூடாகப் பயணிக்கும் மக்களது உயிருக்கு ஆபத்தினை
ஏற்படுத்தக்கூடியளவுக்கு இப்பாலம் சிதைவடைந்த நிலையிலுள்ளது.

இப்பாலம் மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதால் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு
காலங்களில் பாலத்திற்கு மேலாக சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு ஆற்றுநீர் மட்டம்
உயர்ந்து பாய்கின்றது.

இதனால் விபத்துக்கள் அதிகம் இடம்பெறுவதுடன், இதனூடாகப்
பயணிக்கும் மாணவர்கள் பாதுகாப்புக்கருதி அடிக்கடி பாடசாலைகளுக்குச் செல்ல
முடியாத நிலை ஏற்படுகின்றது.

மேலும் கால்நடைகள் அதிகளவில் உயிரிழப்புக்களைச் சந்தித்துள்ளன. விவசாயம்,
வியாபாரம் உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றது.

ஓட்டுமொத்த மூதூர் பிரதேச மக்களதும் பொருளாதாரம் கல்வி, விவசாயம், வர்த்தகம்
மற்றும் அரச தொழில் என்பவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இப்பாலத்தின்
பயன்பாடு உள்ளது.

மேற்படி நிலைமைக்களைக் கருத்திற் கொண்டு இப்பாலத்தினை சிறந்த திட்டமிடலுடன்
புனரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளது.

இதன் பிரதிகளை கிழக்கு மாகாண பிரதம
செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளருக்கு
நடவடிக்கைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version