Home இந்தியா தமிழக கடற்றொழிலாளர்களை வஞ்சிக்கும் மத்திய அரசு : முத்தரசன் காட்டம்

தமிழக கடற்றொழிலாளர்களை வஞ்சிக்கும் மத்திய அரசு : முத்தரசன் காட்டம்

0

தமிழக கடற்றொழிலாளர்களை இந்திய மத்திய அரசு தொடர்ந்து (Central Govt of India) வஞ்சித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் (R. Mutharasan) தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா (Sri Lanka) கடற்படையினரின் தாக்குதல் தொடர்ந்து நடைபெறுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றிலேய மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், கோட்டை பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதிகளிலிருந்து, கடந்த 9-ஆம் திகதி கடற்றொழிலாளர்கள் 176 விசைப் படகுகளில் கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர்.நேற்று (11) அதிகாலை வரை கடற்றொழிலில் ஈடுபட்டு, கரை திரும்பியுள்ளனர்.

கடல் எல்லை

நெடுந்தீவு அருகே வந்து கொண்டிருந்த கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, கடல் எல்லையை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறி மூன்று விசைப்படகுகள் உட்பட 13 கடற்றொழிலாளர்களை கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறிலங்கா கடற்படையினரால் கடந்த 26 நாளில் தமிழக கடற்றொழிலாளர்கள் 26 பேர் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து 13 விசைப் படகுகளும் வலைகளும், பிடிக்கப்பட்ட மீன்களும், இதர உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களது கடற்றொழில் உரிமையை பாதுகாப்பதாக மத்திய அரசு உறுதி மொழிகளை அளித்தது.

மாநில செயற்குழு

எனினும், உறுதி மொழிகளை செயற்படுத்தாமல் தமிழக கடற்றொழிலாளர்களை வஞ்சித்து வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிக்கிறது.

இதுவரை கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து, அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகள் உள்ளிட்ட பொருட்களையும் மீட்டு கொண்டு வர மத்திய அரசும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version