Home உலகம் கனடா விமான விபத்து: பயணிகளுக்கு தலா 30,000 டொலர்கள் நிவாரணம்

கனடா விமான விபத்து: பயணிகளுக்கு தலா 30,000 டொலர்கள் நிவாரணம்

0

ரொறொன்ரோவில் (Toronto) தரையிரங்கும் போது தழைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான டெல்டா விமானத்தில் இருந்து உயிர் தப்பிய பயணிகளுக்கு டெல்டா எயார் லைன்ஸ் தலா 30,000 டொலர்களை இழப்பீடு வழங்க தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த விமானத்தில் பயணித்த 76 பயணிகளும் டெல்டாவின் நிவாரணத்தை ஏற்றுக் கொண்டால், சுமார் 2.3 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையை பிரித்து கொடுக்க வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

நிவாரண தொகை

எனினும், பயணிகள் தங்கள் நிவாரண தொகையை எவ்வாறு பெற்றுக் கொள்ள முடியும் என்பது தொடர்பான விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

அத்தோடு, வாடிக்கையாளர்களுக்கு இந்த நிவாரணத்தை பெற எந்த நிபந்தனைகளும் இல்லை என்றும் இது உரிமைகளைப் பாதிக்காது எனவும் டெல்டா செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், மினியாபோலிஸில் இருந்து ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த டெல்டா விமானம் 4819, திங்கட்கிழமை பிற்பகல் 2:15 மணியளவில் தரையிறங்கும் போது தீப்பிடித்து ஓடுபாதையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

பயணிகள் நிலைமை

விபத்தின் போது, விமானத்தில் 76 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்ததோடு, அவர்கள் அனைவரும் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், விபத்தினால் 21 பேர் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அதில் யாருக்கும் உயிருக்கு ஆபத்தான அளவில் காயங்கள் ஏற்படவில்லை என அறிவிக்கபட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை நிலவரப்படி, காயமடைந்த பயணிகளில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாக டெல்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version