புதிய இணைப்பு
மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வா தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை துமிந்த சில்வா சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்று காலை அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா (Duminda Silva) சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த தகவலை சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க (Gamini B. Dissanayake) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், துமிந்த சில்வா குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட 18 பேர் கொண்ட விசேட மருத்துவ நிபுணர்களின் சிபாரிசுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் எழுத்து மூலமாக முன்வைத்த கோரிக்கையின் பேரில் சுகாதார அமைச்சு மேற்கண்ட விசேட மருத்துவர் நிபுணர்கள் குழுவை நியமித்திருந்தது.
அதன் பிரகாரம் துமிந்த சில்வாவுக்கு சிறைச்சாலை மருத்துவமனையிலோ, வேறு மருத்துவமனைகளிலோ தொடர்ந்தும் சிகிச்சை வழங்கத் தேவையில்லை என்று மருத்துவ நிபுணர்கள் குழு சிபாரிசு செய்துள்ளது.
எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது அவருக்கு சுகவீனக் குறைபாடு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறித்த நிபுணர் குழு சிபாரிசு செய்துள்ளது.
இந்நிலையில், குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம் தற்போதைக்கு துமிந்த சில்வா, சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து சாதாரண சிறைக்கூடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.