இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது
குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலையை வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் சட்டத்தை இரத்து செய்வதற்கான தற்போதைய நடவடிக்கைகளையும் அது
அங்கீகரித்துள்ளது.
ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் பேசிய ஐரோப்பிய ஒன்றியக்
குழுவின் பிரதிநிதி, இலங்கையில் நிலைமாறுகால நீதிக்கான அதிகரித்து வரும்
தேவையை நினைவு கூர்ந்துள்ளார்.
சுயாதீனமான பொது வழக்கு விசாரணை அலுவலகத்தை நிறுவுவதற்கான முன்முயற்சி உட்பட
அரசாங்கத்தின் முயற்சிகளை தாம் ஏற்பதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி
குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகளின் பாதுகாப்பு
இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதி
வழங்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாதது குறித்து தொடர்ந்து கவலை
கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இறந்த மற்றும் இன்னும் காணாமல் போனவர்களின் பல வழக்குகள் தொடர்பாக.
இந்த நிலைமையை அவசரமாகவும் தீர்க்கமான அர்ப்பணிப்புடனும் கவனிக்க வேண்டும்.
இந்தநிலையில், சட்டத்தின் ஆட்சிக்கும், மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான
உத்தரவாதங்களுக்கும் பொறுப்புக்கூறல் மையமாகும் என்று ஐரோப்பிய ஒன்றிய
பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை செயற்படுத்துவதிலும் மனித
உரிமைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் இலங்கையை ஆதரிக்கத் தயாராக
இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
