2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்தியதன் அடிப்படையில், யாழ்ப்பாண மாவட்டம் முதலாவது இடத்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
25 மாவட்டங்களுக்கு மத்தியில், யாழ்ப்பாணம் மாவட்டம் 100 சதவீத முன்னேற்றத்தைக் காண்பித்து முதலாவது இடத்தை பெற்றுள்ளதாக நேற்று (24) நடைபெற்ற அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற கூட்டத்தில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிதியின் பயன்பாடு மற்றும் பௌதீக ரீதியிலான முன்னேற்றத்தின் அடிப்படையில், இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆராயப்பட்ட விடயங்கள்
இந்தநிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாவட்ட அபிவிருத்தி, கிராமிய அபிவிருத்தி, வாழ்வாதார கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடமைப்பு, தேசிய ஒருமைப்பாட்டினை மேம்படுத்தும் கருத்திட்டங்கள், நகர அபிவிருத்தி ஆகிய திட்டங்களின் முடிவுறுத்திய, முடிவுறுத்தாத திட்டங்கள் தொடர்பாகவும் இந்த தரப்படுதலின் போது ஆராயப்பட்டுள்ளன.
குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றியமைக்கு பூரணமாக ஒத்துழைப்பு நல்கியவர்களுக்கு நன்றி தெரிவித்த அரசாங்க அதிபர் எதிர்வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்தும் யாழ் மாவட்டம் முன்னிலையில் திகழ்வதற்கு பூரண ஒத்துழைப்புக்களை நல்குமாறும் கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
