Home உலகம் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்: இறுதியாக மனந்திறந்த நெதன்யாகு

பணயக்கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்: இறுதியாக மனந்திறந்த நெதன்யாகு

0

காசா (Gaza) போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் முதல் பணயக்கைதிகள் குழுவை ஹமாஸ் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) அலுவலகம் அறிவித்துள்ளது.

போர் நிறுத்தம் வெற்றி பெற்றால், காசாவின் பெரும்பகுதியை அழித்த, 46,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற, மற்றும் போருக்கு முந்தைய 2.3 மில்லியன் மக்களை இடம்பெயர செய்த 15 மாத காலப் போர் முடிவுக்கு வரும் என சர்வதேசம் தெரிவிக்கிறது.

பணயக்கைதிகளின் விடுதலை

இது மத்தியகிழக்கில் ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா, யேமனின் ஹவுத்திகள் மற்றும் ஈராக்கில் உள்ள ஆயுதக் குழுக்கள் என இஸ்ரேலுடன் வளர்ந்த பகைமையை தணிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதன்படி, மூன்று கட்ட ஒப்பந்தத்தின் ஆறு வார முதல் கட்டத்தின் கீழ், ஹமாஸ் 33 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும், இந்த குழுவில் அனைத்து பெண்கள் (வீரர்கள் மற்றும் பொதுமக்கள்) குழந்தைகள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் உள்ளனர்.

முதல் கட்டத்தின் முடிவில் இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 வயதுக்குட்பட்ட அனைத்து பலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகளையும் இஸ்ரேல் விடுவிக்கும்.

ஒப்பந்தத்தின் விதிமுறைகள்

விடுவிக்கப்பட்ட மொத்த பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை, விடுவிக்கப்படும் இஸ்ரேலிய பணயக்கைதிகளைப் பொறுத்தது, இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 990 முதல் 1,650 பலஸ்தீனியர்கள் வரை இருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் தொடர்பாக எழுந்த தடைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் இன்று (17) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனினும், பாதுகாப்பு அமைச்சு மற்றும் அரசாங்கத்தால் ஒப்புதல் அளிக்கப்படும் வரை இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது அதிகாரப்பூர்வமாக இருக்காது என கூறப்படுகிறது.

இஸ்ரேலின் இறுதி முடிவு

இதன்படி, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை கூடி போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இறுதி ஒப்புதல் அளிக்கும் என்று நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

கடைசி நிமிட இழுபறிக்கு இஸ்ரேல் ஹமாஸைக் குற்றம் சாட்டியுள்ளதுடன், ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வரவிருக்கும் ஒப்பந்தத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாக ஹமாஸ் நேற்று அறிவித்துள்ளது.

இவ்வாறனதொரு பின்னணியில், ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து காசாவில் 58 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 101 பேர் கொல்லப்பட்டதாக சிவில் அவசர சேவை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version