யேமனில் (Yemen) இஸ்ரேலிய (Israel) தரப்பினரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள போதிலும் தங்களது பதில் தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படும் என ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் (Gaza) இடம்பெற்ற இனப்படுகொலைக்குப் பதிலளிக்கும் வகையில் தங்களது தரப்பிலிருந்து தொடர்ந்தும் தாக்குதல் நடத்தப்படும் என ஹூதி கிளர்ச்சியாளர்கள் கிளர்ச்சி படையின் அரசியல் தலைவரான மொஹமட் அல்-புகைதி தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்ரேல் மீதான தங்களது இராணுவ இலக்குகளை அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக யேமனின் தலைநகரான சனா மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இஸ்ரேல் தாக்குதல்
அங்குள்ள விமான நிலையம், துறைமுகங்கள் மற்றும் மின்னுற்பத்தி நிலையங்கள் என்பவற்றை இலக்கு வைத்து இஸ்ரேல் இவ்வாறு தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதன்போது நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஈரான் ஆதரவு குழுவான ஹூதி கிளர்ச்சியாளர்கள் தரப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் தாம் கவலையடைவதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் போன்றவற்றின் மீதான தாக்குதல்கள் காரணமாக மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.