Home உலகம் போா் விமானங்களை தரையிறக்கி ஒத்திகையில் இறங்கிய இந்தியா : அதிகரித்துள்ள போர் பதற்றம்

போா் விமானங்களை தரையிறக்கி ஒத்திகையில் இறங்கிய இந்தியா : அதிகரித்துள்ள போர் பதற்றம்

0

போா் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய (India) விமானப் படை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ்-மீரட் இடையேயான கங்கா விரைவுச் சாலையில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுதளத்தில் முதல் முறையாக போா் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய விமானப் படை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போா் மற்றும் அவசர காலங்களில் பயன்படுத்தக் கூடிய இந்த ஓடுதளத்தில் பகலில் மட்டுமல்லாது இரவிலும் போா் விமானங்கள் தரையிறங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

பதற்றமான சூழல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், போா் விமானங்களின் ஒத்திகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

விமானப் படையின் தயாா்நிலையை உறுதி செய்வதில் முக்கிய மைல்கல்லாகவும் இது அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் ஏற்கெனவே லக்னெள-ஆக்ரா (உன்னாவ்), பூா்வாஞ்சல் (சுல்தான்பூா்), புந்தேல்கண்ட் (இடாவா) ஆகிய மூன்று விரைவுச் சாலைகளில் போா் விமானங்களைத் தரையிறக்கும் வகையில் அவசரகால ஓடுதளங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று ஓடுதளங்களிலும் பகல் நேரத்தில் மட்டுமே போா் விமானங்களைத் தரையிறக்க முடியும்.

போா் விமானங்கள்

இருப்பினும், கங்கா விரைவுச் சாலையில் இரவிலும் போா் விமானங்களைத் தரையிறக்கும் வசதியுடன் அவசரகால ஓடுபாதை கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் போா் விமானங்கள் பகலில் மட்டுமன்றி இரவிலும் தரையிறங்கக் கூடிய நாட்டின் முதல் விரைவுச் சாலை என்ற சிறப்பை கங்கா விரைவுச் சாலை பெற்றுள்ளது.

இச்சாலையில் 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுபாதை கட்டமைப்புப் பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், போா் விமானங்களைத் தரையிறக்குதல், தாழ்வாக பறத்தல் மற்றும் புறப்படுதலை பரிசோதிக்கும் இரண்டு நாள் ஒத்திகையை இந்திய விமானப் படை தொடங்கியது.

உயரதிகாரிகளின் மேற்பாா்வையில், ரஃபேல், சுகோய், மிராஜ்-2000, மிக்-29, ஜாகுவாா் ஆகிய போா் விமானங்கள், சி-130ஜே சூப்பா் ஹெல்குலிஸ், ஏஎன்-32 ஆகிய சரக்குப் போக்குவரத்து விமானங்கள், எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டா் ஆகியவை ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன.  

பாதுகாப்பு 

ஓடுதளத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை உறுதிசெய்ய 250 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பள்ளி மாணவா்கள் மற்றும் உள்ளூா் மக்கள் இந்த ஒத்திகையை ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.

ரூபாய் 36,230 கோடி மதிப்பீட்டில் மீரட்-பிரயாக்ராஜ் இடையே 594 கி.மீ. தொலைவிலான கங்கா விரைவுச் சாலைத் திட்டத்துக்கு (6 வழிச் சாலை) கடந்த 2021இல் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும், அரசு-தனியாா் பங்களிப்பு முறையில் இச்சாலை கட்டமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version