வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக ராகுல் காந்தி (Rahul Gandhi) பதவி விலகல் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவரது பதவி விலகல் கடிதத்தை நேற்று சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றியும் பெற்றார்.
அதிகாரப்பூர்வமாக பதவிவிலகல்
இதனால், 14 நாட்களில் இரண்டு தொகுதிகளில் ஒன்றை பதவிவிலகல் செய்ய வேண்டுமென்ற நிலை ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ராகுல்காந்தி வயநாடு தொகுதி எம்.பி பதவியிலிருந்து விலகுவது என்ற முடிவை கடந்த 17ஆம் திகதி அறிவித்தார்.
ராகுல்காந்தியின் முடிவை தொடர்ந்து வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி பதவிவிலகல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.