Courtesy: Sivaa Mayuri
நாடாளுமன்ற இணையத்தளமான, (www.parliament.lk) முகப்புப் பக்கத்தில் உள்ள தகவல் இணைப்பை அணுகி, தேவையான தகவல்களை பூர்த்தி செய்யுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குசானி ரோஹனதீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதற்கு மாற்றாக, கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தகவல்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் முதலாவது அமர்விற்கு தேவையான ஏற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தகவல் மேசை ஒன்று செவ்வாய்க்கிழமை (19.11.2024) மற்றும் புதன்கிழமை (20.11.2024) நாடாளுமன்ற வளாகத்தில் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய அடையாள அட்டை
தேவையான ஆவணங்கள் மற்றும் தகவல்கள், உறுப்பினர்களின் அடையாள அட்டைக்கான புகைப்படங்கள், மின்னணு வாக்குப்பதிவுக்கான கைரேகைப் பதிவுகள் என்பன இதன்போது பதிவுசெய்யப்படும்.
இந்த தகவல் மேசையை கண்டிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அணுக முடியும்.
அதேநேரம், நாடாளுமன்ற நுழைவை இலகுப்படுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாகன ஓட்டுனர்களுடன் மட்டுமே குறிப்பிட்ட திகதிகளில் நாடாளுமன்றத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அத்துடன், உறுப்பினர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டைகள், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றைக் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.