இஸ்ரேலின் உளவாளி ஒருவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரானின் உர்மியா நகரத்தில் இராணுவ தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை சட்டவிரோதமாகப் புகைப்படம் எடுத்தபோது குறித்த நபர் ஈரான் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் அகில் கேஷவர்ஸ் என்ற 27 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யபட்டுள்ளார்.
ஈரான் கட்டமைப்புகள்
இதையடுத்து, ஈரானின் கட்டமைப்புகள் குறித்த செய்திகளை இஸ்ரேலின் மொஸாத் உளவாளிகளிடம் அவர் பகிர்ந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, இஸ்ரேலுக்காக ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்பட ஏராளமான நகரங்களில் 200 இற்கும் அதிகமான உளவுப்பணிகளை அவர் மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
இந்தக் குற்றச்செயலுக்காக அகில் கேஷவர்ஸுக்கு ஈரானின் உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில், இன்று (20) காலை அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்பு ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 12 நாள் போரில் ஈரானின் முக்கிய இராணுவத் தளபதிகள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் உள்பட 1,100 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, இஸ்ரேலுக்காக உளவுப்பார்த்த குற்றச்சாட்டில் ஈரானில் இதுவரை 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
