ஈரான் – இஸ்ரேல் மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேற்கு கரையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் தளபதி இஸ்லாம் ஜமீல் ஓடே (Islam Jamil Odeh) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவ படை அறிவித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் மேற்கு விளிம்பில் உள்ள துல்கரேமில், உளவுத்துறை அடிப்படையிலான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை நடத்திய போது அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
சுற்றிவளைப்பு
இந்த நிலையில், பலஸ்தீன சுகாதார அமைச்சகம் அந்த நபரை 29 வயதான இஸ்லாம் ஜமீல் ஓடே என அடையாளம் கண்டுள்ளது.
பலஸ்தீனிய செய்தி நிறுவனமான வஃபாவின் கூற்றுப்படி, இஸ்ரேலியப் படைகள் அதிகாலையில் துல்கரேமின் அல்-சலாம் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தை சுற்றி வளைத்துள்ளன.
தாக்குதல்
அதன் போது, தொடர்ச்சியான துப்பாக்கிச்சூடு மற்றும் 20 க்கும் மேற்பட்ட வெடிகுண்டு குண்டுகளுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஒக்டோபர் 03 இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹாமஸ் தளபதி ஜாஹி ஓஃபி கொல்லப்பட்டதை தொடர்ந்து, துல்கரேமில் ஹமாஸ் தாக்குதல்களுக்கு ஜமீல் ஓடே தலைமை தாங்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.