லெபனானின் (Lebanon) தெற்கு கடற்கரையில் தாக்குதல் தொடங்கப்பட உள்ளதாக இஸ்ரேல் (Israel) இராணுவம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவை (Gaza) நிர்வகித்து வரும் ஹமாஸ் (Hamas) அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தும் போரில் ஹமாசுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறனர்.
இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா (Hassan Nasrallah) உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
இதனால் ஹிஸ்புல்லா – இஸ்ரேல் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.
குறிப்பாக தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் தாக்குதல் தீவிரப்படடுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் லெபனானின் தெற்கு கடற்கரையில் தாக்குதல் தொடங்கப்பட உள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது.
இராணுவ நடவடிக்கை
இது குறித்து இஸ்ரேல் இராணுவம் கூறும்போது, லெபனானின் தெற்கு கடற்கரையில் விரைவில் இராணுவ நடவடிக்கைகளை தொடங்க உள்ளோம். எனவே பொதுமக்கள் கடற்கரைகளில் இருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளது.
மேலும் லெபனானில் தனது தாக்குதலை விரிவுபடுத்த இஸ்ரேல் தயாராகியுள்ள நிலையில், இஸ்ரேலின் (Israel) மூன்றாவது பெரிய நகரமான ஹைஃபா மீது நேற்றையதினம் (07.10.2024) ஹிஸ்புல்லா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.