இஸ்ரேல் (Israel) இராணுவம் இராணுவ வலிமையை மட்டுமின்றி உளவியல் தந்திரங்களையும் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
360 சதுர கிமீ பரப்பளவு மட்டுமே கொண்ட காசாவில் (Gaza) ஹமாஸை குறிவைத்து இஸ்ரேல் ஓராண்டுக்கு மேலாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால், சில நேரங்களில் பாதுகாப்பான பகுதிகளிலும் கூட ஹமாஸ் இருப்பதால் அங்கும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது.
இஸ்ரேல் ஏவுகணை
சமீபத்தில் கூட காசாவின் அல்-மவாசியில் உள்ள மற்றொரு பாதுகாப்பான மண்டலத்தில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 20 பேர் கொல்லப்பட்ட நிலையில், பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் உளவியல் போர்த் தந்திரங்கள் மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.
அதில் ஒன்று தான் ஸ்பீக்கர்களை கொண்ட ஒரு வகை ஆளில்லா விமானங்கள். இந்த ஆளில்லா விமானங்கள் காசா மீது பறக்கும் நிலையில், அதில் குழந்தைகளின் அழுகை, பெண்களின் அலறல் போன்ற சத்தங்கள் அதிக சத்தத்தில் ஒலிபரப்பப்படுகிறது.
ஹமாஸ் படை
இது தொடர்பாகக் காசா பகுதியினர் கூறுகையில், “நள்ளிரவு நேரங்களில் குழந்தைகளின் அழுகை அல்லது இளம்பெண்கள் கத்துவது போன்ற சத்தங்கள் கேட்கிறது.
என்ன நடந்தது எனப் பார்க்க வெளியே வந்தால் இஸ்ரேல் ராணுவத்தின் ஆளில்லா விமானங்கள் இருக்கும்.
ஹமாஸ் படையினரை வெளியே இழுக்க இந்தத் திட்டத்தை இஸ்ரேல் பயன்படுத்துகிறது.
ஹமாஸ் அமைப்பினர் வெளியே வந்தால் அவர்கள் மீது இஸ்ரேல் ஸ்னைப்பர் தாக்குதல் நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அதிகளவில் ஒலியை ஏற்படுத்தும் ஏவுகணைகளையும் இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது. குறைந்த உயரத்தில் பறக்கும் இந்த ஏவுகணைகள் அதீத ஒலியை ஏற்படுத்துகிறது.
சைபர் தாக்குதல்
இது காசாவில் உள்ளவர்கள் மத்தியில் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
காசா மட்டுமின்றி லெபனானிலும் கூட இஸ்ரேல் இதுபோன்ற உளவியல் போர்த் தந்திரங்களைப் பயன்படுத்துகிறது.
இது மட்டுமின்றி சைபர் தாக்குதலையும் இஸ்ரேல் குறிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது லெபனான் மற்றும் பெய்ரூட்டில் உள்ள உள்ளூர் மக்களை இஸ்ரேல் ஹேக் செய்கிறது.
அவர்களுக்கு திடீரென உள்ளூர் நம்பரில் இருந்து கால் வருமாம்.
அதை எடுத்தால் எச்சரிக்கை மெசேஜ்கள் பிளே ஆகுமாம். இதுபோல ஏகப்பட்ட உளவியல் தந்திரங்கள் மூலமாகவும் இஸ்ரேல் தொடர்ந்து போரிட்டு வருகிறது.