Courtesy: uky(ஊகி)
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயம் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி செயலகத்தினால் கல்வியமைச்சுக்கு அறிவுறுத்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளரினால் ஜனாதிபதிச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பிலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் நடைபெற்று வரும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளரினால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட கடிதத்தில் பாடசாலை தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுத் தரக் கோரியிருந்ததாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதற்கான நடவடிக்கையாகவே இலங்கை ஜனாதிபதிச் செயலகத்தினால் இசுறுபாயவில் உள்ள இலங்கை மத்திய கல்வியமைச்சுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன் அதன் பிரதியொன்றும் தமக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கல்வியமைச்சுக்கு சென்ற கடிதம்
இந்த ஆண்டு மே 21 திகதியிடப்பட்டு PS/PRD/PG/12/01/14982 என்ற இலக்கமிடப்பட்ட கடிதமாக அது இருக்கின்றது.
கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள அக்கடிதத்தில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபர் தொடர்பாக ஜனாதிபதிச் செயலகத்திற்கு இப்பாடசாலையின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாட்டுக் கடிதம் தொடர்பாக ஆராய்ந்து நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களுக்கமைவாக துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
அத்துடன் கல்வியமைச்சினால் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலம் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதிச் செயலகத்திற்கு அறிக்கையிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அக்கடிதத்தின் பிரதியானது செயலாளர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயம், ஒட்டுசுட்டான் என்ற முகவரிக்கு தகவலுக்காக அனுப்பப்பட்டுள்ள குறிப்பும் அக்கடிதத்தில் இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயர் மட்டங்களிற்குச் சென்ற முறைப்பாடு
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்திற்கு எதிராக இருந்து வரும் தொடர் குற்றச்சாட்டுக்களை உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அது தொடர்பாக ஆராய்ந்து தீர்வு காண கோரப்பட்டிருந்தது.
வலயக்கல்விப் பணிமனை மற்றும் மாகாண கல்வித் திணைக்களம் என உரிய படிமுறைகளுக் கூடாக பயணப்பட்டிருந்த போதும் அவர்களால் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து தாம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியவில்லை.
சில விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்திக் கொண்ட விசாரணைக் குழுக்கள் தீர்வு காணும் நோக்கில் பரிந்துரைகள் சிலவற்றை முன்வைத்திருந்த போதும் அவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதனாலேயே ஜனாதிபதிச் செயலகம் மற்றும் வடமாகாண ஆளுநருக்கு தங்கள் முறைப்பாடுகளை முன்வைத்ததாக பாடசாலை அபிவிருத்தி சங்கம் சார்பாக பேசியிருந்தவர் அவர்களின் முயற்சிகள் மற்றும் தீர்வுக்கான உயர்மட்ட நாடல் தொடர்பில் மேற்கொண்ட கேட்டல்களுக்கு விளக்கமளித்திருந்தார்.
குற்றச் சாட்டுக்களை முன்வைக்கும் போது உரிய கீழ்மட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கும் போது நல்ல தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடிந்திருக்கும்.எனினும் அவர்களின் அக்கறையற்ற போக்கு உயர்மட்ட அதிகாரிகளை நாடி தீர்வுகளை பெற முயற்சிக்கத் தூண்டி விட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்து உறுதிப்படுத்திக்கொண்டு தீர்வு காண முயற்சிக்காத அதிகாரிகளின் செயற்பாடு அவர்களும் இந்த முறைகேடுகளுக்கு துணை போகின்றனரோ என்று தம்மை சிந்திக்கத் தூண்டுவதாகவும் குறிப்பிட்டார்.
ஊழலுக்கெதிராக போராடும் சமூக ஆர்வலர்கள்
நாட்டில் ஊழல் மலிந்து விட்டதாக பேசிக்கொள்ளும் அரசியல் பேச்சாளர்களிடையே ஊழலுக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலர்கள் பலர் வடக்கில் இருக்கின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம்.
கீழ் மட்ட அதிகாரிகள் முதல் உயர் பதவிகளில் உள்ளவர் வரை தொடரும் சங்கிலித் தொடர் போன்ற வடக்கில் நிலவும் ஊழல் மற்றும் மோசடிகளில் இருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளும் உயரிய போக்கு அவர்களிடத்தில் இருப்பதையும் பல சமூக ஆர்வலர்களுடன் மேற்கொண்ட உரையாடல்கள் மூலம் அறிய முடிகின்றது.
வடக்கில் உள்ள அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் இணைந்து பயணிக்கும் ஊழலுக்கு எதிரான பிரஜைகள் புலனக் குழுவில் தற்போது பலரும் தாம் சார்ந்த நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல்கள் அவற்றுக்கு எதிரான அவர்களது போராட்டங்கள் மற்றும் அவற்றுக்கான நடவடிக்கைகளை எடுக்க உதவி கோருதல் என்றவாறான கருத்துப்பகிர்வுகளை முன்வைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் ஊழலற்ற ஒரு தேசத்தை உருவாக்கும் நோக்குடன் செயற்பட்டு வரும் சமூக ஆர்வலர்களின் விடா முயற்சி அவர்களை வெற்றி நோக்கி கொண்டு சென்றுவிடும் என நம்பிக்கை கொள்ள வைப்பதாக சமூக விடய ஆய்வுகளில் ஆர்வமுடன் இயங்கி வரும் சமூக விடய ஆய்வாளர் வரதன் இது தொடர்பில் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
நிதானமான செயற்பாடுகள்
ஊழலுக்கு எதிராக போராடிவரும் ஒவ்வொருவரும் ஒரு தனிமனிதனின் சுயமரியாதை மற்றும் அவர் சார்ந்த நபர்களின் நன்மதிப்பு என்பவற்றையும் கருத்தில் எடுத்துச் செயற்படுதல் வேண்டும்.
இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்களை மதித்து அதன் வழி தங்களின் பயணங்களை வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.
அப்படியான ஒரு முயற்சியே மக்களால் வரவேற்கப்படுவதோடு நிரந்தரமான ஊழல்களற்ற சமூக மாற்றத்திற்கு அது தேவையானதாகவும் இருக்கும்.
இன்று ஊழல்வாதியாக இனம் காணப்படும் ஒரு அதிகாரி முன்னர் நாட்டுக்கும் சமூகத்திற்கும் அளப்பரிய சேவைகளை ஆற்றியிருப்பவராகவும் இருக்கலாம்.
இவ்வாறான ஒரு சூழலில் அந்த அதிகாரி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் போது அதற்கெதிரான நடவடிக்கைகள் தொடர்பில் கூடியளவு நிதானம் தேவை என்பதும் இங்கே நோக்கத்தக்கது.