தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளுக்கிடையே எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறும் சந்திப்பு ஒரு திருப்பு முனையாக அமையும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பில், நாடாளுமன்ற குழுத் தலைவர்களைத் தாண்டி, கட்சியின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதோடு, இனப்பிரச்சினை தொடர்பாக அறிவியல் மற்றும் அதிகார ரீதியான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் நபர்களையும் இணைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
இந்த சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைய வேண்டும். கட்சி ரீதியாக பேசப்பட்டு, ஒருமித்த முடிவுக்கு வரவேண்டியது அவசியம்.
நாம் கலந்துரையாடிய பிறகு, கட்சியின் அனுமதியைப் பெற வேண்டும் என்பதே முறையாகும். எந்த ஒரு குழுவும் கட்சியின் அனுமதியின்றி செயற்படக்கூடாது.
தமிழ் தேசிய நிலைப்பாட்டை வலியுறுத்துவதற்கு குறைந்தது 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்தில் ஒரு இணக்கப்பாடு இல்லாமல் தமிழ்தேசிய அரசியல் எதிர்காலத்தில் கடுமையாக பாதிக்கப்படும்.
அரசாங்கமும் இன்றைக்கு தான் விரும்பியபடி தமிழ் தேசிய அரசியலை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது. ஆனால் வட கிழக்கில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை மக்கள் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் தான் தங்களுடைய வாக்குகளை பயன்படுத்தியுள்ளனர்.
கடந்த தேர்தலை வைத்துக் கொண்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை நிராகரிப்பதற்கும் கொச்சைப்படுத்துவதற்கும் அனுமதிக்கக் கூடாது” என தெரிவித்தார்.