Home உலகம் டியாகோ கார்சியா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்கள்! பிரித்தானியா எடுத்த தீர்மானம்

டியாகோ கார்சியா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்கள்! பிரித்தானியா எடுத்த தீர்மானம்

0

இந்தியப் பெருங்கடலிலுள்ள பிரித்தானிய – அமெரிக்க இராணுவத் தீவான டியாகோ கார்சியா முகாமில், பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களை தற்காலிகமாக ரொமேனியாவுக்கு அனுப்ப பிரித்தானியா அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், ஆறு மாதங்களுக்குப் பின்னர், அவர்கள் பிரித்தானியாவுக்கு மாற்றப்படலாம் அதேநேரம் குழுவில் உள்ள மற்றவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு நிதி சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டில், குறித்த இலங்கை தமிழர்கள், கனடாவை நோக்கிய பயணித்த படகு, விபத்தில் சிக்கிய பின்னர், டியாகோ கார்சியாவில் தஞ்சமடைந்தனர்.

பிரித்தானிய அரசின் தீர்மானம்

இதன் பின்னர், அவர்கள் தம்மை பிரித்தானியாவுக்கு அனுப்பவேண்டும் என்று கோரி வந்தபோதும், பின்கதவு இடப்பெயர்வு பாதையை உருவாக்கும் என்ற அச்சத்தில் முன்னைய பிரித்தானிய அரசாங்கம், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் இருந்து வந்தது.

அதேநேரம் அந்த தீவில் அவர்கள் பாரிய துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகி வந்தனர் என்று குற்றம் சுமத்தப்பட்டு வந்தது.

இதன் காரணமாக சிலர் சுயதீங்கு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில், மருத்துவ சிகிச்சைகளுக்காக ருவண்டாவுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்தநிலையில், டியாகோ கார்சியாவை உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடல் பகுதியின் இறையாண்மையை மொரிஸியஸுக்கு ஒப்படைப்பதாக பிரித்தானியா அறிவித்ததை அடுத்தே, இலங்கை ஏதிலிகளுக்கு இந்த புதுவாழ்வு கிடைத்துள்ளது.

டியாகோ கார்சியாவில் தற்போது 56 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் எட்டு பேர் சுய-தீங்கு அல்லது தற்கொலை முயற்சிகளுக்குப் பிறகு மருத்துவ சிகிச்சைக்காக மாற்றப்பட்டு தற்போது ருவாண்டாவில் தங்கியுள்ளனர்.

ருவாண்டா திட்டம்

இந்தநிலையில் தற்போது ருவாண்டாவில் தங்கியுள்ள இலங்கை தமிழர் ஒருவர், ருமேனியாவுக்குச் செல்ல வாய்ப்பளிக்கப்பட்டமையானது, மிகப் பெரிய நிவாரணம் என்று விபரித்துள்ளார்.

மற்றுமொருவர் மூன்று ஆண்டுகளில் இது தமக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள் என்று கூறியுள்ளார் .

இதற்கிடையில் டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பும் விரைவில் பிரித்தானிய நீதிமன்றில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version