பெருந்தோட்ட மக்கள் 200 வருட காலம் அனுபவித்து வந்த பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கத்தில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் (Sundaralingam Pradeep) தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல(Battaramulla) – செஸ்திரிபாயவிலுள்ள அமைச்சுக் காரியாலயத்தில் தனது பிரதியமைச்சுக் கடமைகளை இன்றையதினம் (22.11.2024) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி தொழிலமைச்சர் மஹிந்த ஜெயசிங்க, அமைச்சின் அதிகாரிகள், ஊழியர்கள், பிரதியமைச்சரின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டன்டிருந்தனர்.
சமூக உட்கட்டமைப்பு
இதேவேளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள சுந்தரலிங்கம் பிரதீப்புக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்சின் பொதுச்செயலாளரும், நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, “தேசிய மக்கள் சக்தி சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான சுந்தரலிங்கம் பிரதீப், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை மகிழ்ச்சியளிக்கின்றது.
மலையக மக்களின் காணி உரிமை தொடர்பாக நாடாளுமன்றத்திலும், தனது அமைச்சினூடாகவும் அதிக கரிசனைக்காட்டி நில உரிமையினை பெற்றுக்கொடுக்க முக்கியத்துவம் வழங்குவார் என நம்புகின்றேன்.” எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.