Home இலங்கை அரசியல் மாபியா கும்பல்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த விடுதலைப் புலிகள் – அநுர அரசு பெருமிதம்

மாபியா கும்பல்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த விடுதலைப் புலிகள் – அநுர அரசு பெருமிதம்

0

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமையினால் போதைப்பொருள் மாபியாக்களால் அந்தப் பகுதிகளுக்குள் ஊடுறுவ முடியவில்லை என சமகால அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் போதைப்பொருள் வர்த்தகம் தீவிரம் அடைந்ததாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தென் மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்கள் முன்னாள் ஜனாதிபதிகளின் ஒருங்கிணைப்புடன் இயக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதாள உலகம்

வடக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் செயற்பாட்டில் இருந்தமையினால் அங்கு ஒரு பாதாள உலகத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டாலும், அவை மிகவும் தீவிரமாக இருக்கவில்லை.

இந்தக் குழுக்களைக் கட்டுப்படுத்த ஒரு God father இருந்தமையே இதற்குக் காரணம் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அரசியல்வாதிகளின் தலையீடு

மேலும், பாதாள உலகத்திற்குப் பொறுப்பான அந்தந்த அரசாங்கங்களின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் ஈடுபட்டதாக அமைச்சர் கூறினார்.

பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படும் போது, தொடர்புடைய அரசியல் தலைவர்கள் அல்லது அவர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தலையிட்டு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே தொகுதிகள் பகிரப்பட்டதால் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரட்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version