Home இலங்கை அரசியல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அநுர அரசாங்கத்தின் முக்கிய முடிவு

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அநுர அரசாங்கத்தின் முக்கிய முடிவு

0

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்(Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார். 

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

 தமிழ் மக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கை  

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  

தமிழ் மக்களின் பிரச்சினைகளை அணுகுவதற்கு நான்கு வகையான அணுகுமுறைகளைக் கையாள வேண்டுமென்று நாங்கள் கூறுகின்றோம். முதலாவது நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவாகவுள்ள பிரச்சினைகள். அவை வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு, போதைவஸ்த்துப் பாவனை என்பனவாக அமையலாம்.

முதலில் அந்த பிரச்சினைகளில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான தீர்வை வழங்கும் போது பல்வேறு பிரச்சினைகள் தீர்ந்து விடும். ஆகவே இவற்றில் இருந்து நாம் மக்களை மீட்டெடுக்க வெண்டும்.

இப்பிரச்சினைகளுக்கான தீர்வு இதுநாள் வரைக்கும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குக்கென தனித்தனியாக இருந்து வந்துள்ளது. எனவே முதலாவதாக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது பல்வேறு பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்.

இரண்டாவதாக, தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் தனித்துவமான பிரச்சினை. தமிழர் என்ற காரணத்தினால் அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை, மொழி ரீதியிலான பாகுபாடு போன்றவற்றில் இருந்து தமிழ் மக்களை மீட்டெடுக்க தேவையான  நடவடிக்கைகைள மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாக 99 சதவீதமான தமிழ் மக்கள் வாழ்கின்ற வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணத்தில், தமிழ் பொலிஸ் உயரதிகாரிகளோ, குறைந்தபட்சம் தமிழ் OIC கூட யாழ். மாவட்டத்தில் கிடையாது. இது போன்ற பிரச்சினைகள் இங்கு காணப்படுகின்றன.

பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சி

அத்துடன் இன்று அரசாங்கத் திணைக்களங்களுக்குச் சென்று தமிழில் முறைப்பாடு கடிதமொன்றைக் கூட வழங்க முடியாத நிலையே உள்ளது. தமிழர்கள் என்ற உணர்வோடு, அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது.

இவையனைத்தும் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் தனித்துவமான பிரச்சினைகள். எனவே இந்த பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற விடயத்தில் நாம் தெளிவாகவுள்ளோம். அவற்றை தீர்ப்போம்.

மூன்றாவதாக மாகாண சபை தேர்தலை அடுத்த வருடம் நடத்துவோம். மாகாணசபை தேர்தல் தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துக்களை கூறுகின்றார்கள். அவை ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்கள் ஆகும்.

ஏனெனில் நாம் எமது கொள்கை விளக்க உரைகளில் நாம் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். மாகாணசபை தேர்தல் நடத்தப்படும் அதன் ஊடாக அதன் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

13ஆவது திருத்தச் சடடத்தின் கீழ் உள்ள மாகாணசபை தேர்தலை நாங்களும் உள்வாங்கிக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் மாகாண சபை தேர்தலும் நடத்தப்படுகின்றது.

நான்காவதாக புதிய அரசியல் அமைப்பாகும். இந்த நாட்டில் உருவாக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு சட்டமூலங்கள் அனைத்தும் இதுவரைக்காலமும் ஆட்சி செய்த ஆளுந்தரப்பினரின் விருப்பமாகவே இருந்திருக்கின்றதே தவிர மக்களுடைய விருப்பம் அல்ல. எனவே மக்களுடைய விருப்பத்தை உள்வாங்கி ஒரு அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

அதற்காக நாட்டில் உள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவர் உட்பட நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின் புத்திஜீவிகளின் கருத்துக்களை உள்வாங்கி நீண்டு நிலைக்கக் கூடிய ஒரு நிரந்தரமான அரசியல் அமைப்பொன்றே எமக்கு தேவையாகவுள்ளது.

அதன்படி, 2015ஆம் 2019ஆம் ஆண்டுகளில் விவாதிக்கப்பட்டு இன்று கைவிடப்பட்டுள்ள இந்த அரசியலமைப்பை கவனத்திற்கொண்டு அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை மேற்கொண்டு இலங்கை மக்களின் அரசியலமைப்பாக உருவாக்குவதே எமது நோக்கமும் அணுகுமுறையுமாகும் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version