Home இலங்கை அரசியல் ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் பதவியில் நீடிக்க ரணில் வியூகமா..! சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் பதவியில் நீடிக்க ரணில் வியூகமா..! சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

0

“ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாமல் தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்க பதவியில்
இருப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் மக்கள் மற்றும்
அரசியல் கட்சிகளிடத்தில் ஏற்பட்டிருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (suresh premachandran) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையின் அரசியல் சாசனத்தின்படி எதிர்வரும் செப்டெம்பர், ஒக்டோபர் மாதம்
அளவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று புதிய ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்.

இலங்கையின் தேர்தல் ஆணையகமும் புதிய தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும்
என்றும், அதற்கான திகதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறி வருகின்றது.

இது இப்படி இருக்க அரசியல்வாதிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும்
ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்ற அச்சம் தொற்றிக்கொண்டுள்ளது. கடந்த
காலங்களிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு தள்ளிவைத்திருக்கின்றது.

ஜனநாயக உரிமைகள் மதிக்கப்படவில்லை

மாகாண
சபைத் தேர்தலில் புதிய தேர்தல் முறையொன்றைக் கொண்டு வருகின்றோம் என்று காரணம்
கூறப்பட்டு காலவரையறையின்றி அந்தத் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.

மாகாண சபைகள், உள்ளூாட்சி சபைகள் என்பன அரசின் ஏஜன்டுகள் அல்லது அரசால்
நியமிகப்பட்டவர்கள் எனப்படுவோரின் அதிகாரத்தின் கீழ்க் காணப்படுகின்றது.

உள்ளூராட்சி மன்றத்திலிருந்து மாகாண சபை மற்றும் நாடாளுமன்றம் வரையும் அரசின்
செல்வாக்கு மேலோங்கிக் காணப்படுகின்றது.

அரசு தான் நினைத்த விடயங்களைச்
செய்கின்ற சூழ்நிலைதான் இன்று ஏற்பட்டிருக்கின்றது. எதிர்க்கட்சியோ அல்லது
மக்களின் ஜனநாயக உரிமைகளோ மதிக்கப்படவில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட
அமைப்புக்கள் உருவாக்கப்படவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
ஆயினும், அந்தத் தேர்தல் நடைபெறுமா என்ற ஐயம் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள்
மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. எனவே, இன்னுமோர் அரகலய போராட்டம் தேவையா?
அல்லது நாடு முழுவதும் மக்கள் எழுச்சியொன்று ஏற்பட வேண்டுமா? போன்ற
கேள்விகளும் எழுந்து நிற்கின்றன.

அரசின் இவ்வாறான போக்குகள் மீண்டும் பாரிய எழுச்சியொன்றுக்கு வழிவகுக்கலாம்.
இவ்வாறான எழுச்சிகள் பொருளாதாரக் கொள்கைகள், திட்டங்கள் என்பவை பின்தள்ளிப்
போவதற்கான சூழ்நிலையையும் ஏற்படுத்தும்.

ஜனநாயகத்தை மதித்து மக்களின் வாக்குரிமைகளை மதித்து ஜனாதிபதித் தேர்தல்
குறிப்பிடப்படும் திகதியில் குறிப்பிடப்படும் காலத்தில் நடத்தப்பட வேண்டும் என
ஒட்டுமொத்த மக்களும் விரும்புகின்றனர். தேர்தல்களைக் காலவரையறையின்றி
ஒத்திவைப்பதை விடுத்து மக்களை மதித்து தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது
எமது நிலைப்பாடாகும்.” – என்றார்.

மாரடைப்பால் ஏற்பட்டுள்ள அதிகளவான மரணங்கள் : மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version