அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளாராக கமலா ஹாரிஸ் (Kamala Harris) தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் விழாவில் இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் (A. R. Rahman) இசைக் கச்சேரி ஒளிபரப்பாகவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆசிய அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பான ஏ.ஏ.பி.ஐ.(AAPI) இதுகுறித்த அறிவிப்பையும் மற்றும் டீசர் காணொளியையும் வெளியிட்டுள்ளது.
இந்திய மற்றும் ஆப்பிரிக்க பாரம்பரியத்தில் இருந்து வந்த கமலா ஹாரிசை ஆதரிக்கும் தெற்காசியாவின் முதல் முக்கிய சர்வதேச கலைஞர் ஏ.ஆர்.ரகுமான் ஆவார்.
தேர்தல் பிரசாரம்
கமலா ஹாரிசின் தேர்தல் பிரசாரத்திற்கு ஆதரவாக பிரத்யேகமாக 30 நிமிட இசைக்கச்சேரி காணொளியை ஏ.ஆர்.ரகுமான் பதிவு செய்துள்ளார்.
அந்த காணொளியில் ஏ.ஆர்.ரகுமானின் புகழ்பெற்ற சில பாடல்கள் மற்றும் அதிபர் தேர்தலில் களம்காணும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ள கமலா ஹாரிஸ் பற்றிய குறிப்புகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாடல் காணொளி யூடியூபில் தளத்தில் வெளியாகியுள்ள நிலையில் அதில் ஏ.ஆர் ரகுமான், கமலா ஹாரிஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
வைரலான பாடல்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு தெற்காசிய தமிழனாக உலகத்தை சிறந்த இடமாக மாற்ற கமலா ஹாரிஸ் முற்படுகிறார்.
அவரின் அர்பணிப்பை கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன் அத்தோடு முதல் பெண் அதிபரை பார்க்க இருக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து. அவர் இசையமைத்த பிரபலமான பாடல்களை பாடிய நிலையில் சிங்கப் பெண்ணே உள்ளிட்ட பாடல்களும் இடம்பெற்றன.
குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரகுமான் களமிறங்கியது அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.