Home இலங்கை அரசியல் உண்மை வெளிவந்ததால் முன்னாள் சபாநாயகர் எடுத்த முடிவு! மீண்டும் களத்தில் மகிந்த தரப்பு

உண்மை வெளிவந்ததால் முன்னாள் சபாநாயகர் எடுத்த முடிவு! மீண்டும் களத்தில் மகிந்த தரப்பு

0

தனது கல்வித் தகைமை தொடர்பான உண்மை வெளிவந்ததை அடுத்து சபாநாயகர் பதவியில் இருந்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல பதவி விலகியமை வரவேற்கத்தக்கது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்(Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார். 

மேலும், 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடும் பிரதான அரசியல் கட்சியாக மீண்டும் எழுச்சிப் பெறுவோம் எனவும் அவர் தெரிவித்தார். 

பத்திரிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மக்கள் உண்மையை விளங்கிக் கொள்வார்கள் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து விலகியமை  வரவேற்கத்தக்கது. போலியான கல்வித் தகைமையை சமர்ப்பித்து, சபாநாயகராக பதவி வகித்ததன் பின்னர் உண்மை வெளிவந்ததை தொடர்ந்து ஏற்பட்ட கடும் சர்ச்சையால் சபாநாயகர் பதவி விலகினார்.

போலியான கல்வி தகைமையை காண்பித்து ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றி நாடாளுமன்றத்தின் கௌரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திய அசோக ரன்வலவுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.

மக்கள் விடுதலை முன்னணியின் உண்மை முகத்தை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்வார்கள். போலியான வாக்குறுதிகளை வழங்கியே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது.

அவர்கள் குறிப்பிட்ட விடயங்கள் அவர்களுக்கே எதிரானதாக அமையும். நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் முறையாக நிறைவேற்ற வேண்டும்.

நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அரசாங்கத்தின் தவறை சுட்டிக்காட்டும் பலமிக்க எதிர்க்கட்சியாக நாங்கள் செயற்படுவோம்.

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடும் பிரதான அரசியல் கட்சியாக மீண்டும் எழுச்சிப் பெறுவோம் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version