பிரித்தானியாவில் (United Kingdom) இடம்பெறும் பொதுத்தேர்தலில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இடம்பெறும் பொதுத்தேர்தலில் இந்த முறை தொழிற்கட்சி அலைவீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், அடுத்த மாதம் நான்காம் திகதிக்குப் பின்னர் ஆட்சியமைக்கலாம் என பலமாக நம்பப்படும் தொழிற்கட்சியானது இந்த தேர்தலில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த இரண்டு பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உருவாகும் வாய்ப்பு
குறித்த வாய்ப்பு சரியாக பயன்படுத்தப்பட்டால் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
பாரம்பரியமாக தொழிற்கட்சியின் கோட்டையாக கருதப்படும் ஸ்ராட்போட் அன்ட பௌ தொகுதியில் உமா குமரன் (Uma Kumaran) போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், கருத்துக்கணிப்புகளில் இவருக்குரிய வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில் தனக்கு பக்கபலமாக தமிழ் மக்கள் நிற்கவேண்டுமென ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய கருத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிகமாக தமிழ் மக்கள்
இதேபோல, சட்டன் அன்ட் சீம் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ள கிறிஸ்னி ரிசிகரனும் (Chrisni Rishikaran) தமிழ் மக்களிடம் ஆதரவு கோரியுள்ளார்.
சட்டன் அன்ட் சீம் தொகுதி கென்சவேட்டிவ் ஆதரவு பெற்ற தொகுதியாக இருந்தாலும் இந்த முறை அந்தக்கட்சி மீதாக அதிருப்தியால் கிறிஸ்னியின் வெற்றிக்கான சாத்தியங்களும் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் அவரை வெற்றியடைய வைப்பதற்கு அதிகமாக தமிழ் மக்கள் உழைக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.