Home இந்தியா இந்தியாவுடன் அநுர அரசு செய்த இரகசிய ஒப்பந்தம் – வெடித்த சர்ச்சை

இந்தியாவுடன் அநுர அரசு செய்த இரகசிய ஒப்பந்தம் – வெடித்த சர்ச்சை

0

இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு இன்னும் நாடாளுமன்றத்துக்கோ, நாட்டுக்கோ
தெரியப்படுத்தவில்லை.

அவ்வாறெனில் அரசு செய்யக் கூடாத ஒன்றைச் செய்துள்ளதா?
தெரிந்தோ தெரியாமலோ எமது தாய் நாடு காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா
கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் நேற்று (07.06.2025) சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு
கேள்வி எழுப்பினார்.

அமைச்சரவை அனுமதி

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இந்தியாவுடன் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன?
அவற்றின் உள்ளடக்கங்கள் எவ்வாறானவை? அவற்றுக்குச் சட்டமா அதிபரின் அனுமதி
கிடைக்கப் பெற்றதா? அல்லது அமைச்சரவை அனுமதி கிடைத்ததா?

அவை நாடாளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்பட்டதா என்பது தொடர்பில் நாம் தொடர்ச்சியாகக் கேள்விகளை
முன்வைத்தோம்.

கடந்த வாரம் பிரதமரிடம் இது குறித்து கேள்வி எழுப்பினோம். ஆனால்,
பிரதமருக்குப் பதிலாக சபை முதல்வர் எழுந்து தம்வசம் தகவல்கள் இல்லை என்றும்,
அதற்குச் சற்று கால அவகாசம் வேண்டும் என்றும் கூறினார்.

நாட்டில் பரவலான பேசுபொருளாக அமைந்த இந்த விவகாரம் தொடர்பில் தம்மிடம் தகவல்
இல்லை என சபை முதல்வர் கூறுவது புதுமையாகவுள்ளது.

பிறிதொரு நாட்டுடன் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பில்
கேள்வி எழுப்பினாலும், எழுப்பாவிட்டாலும் அவை தொடர்பான புரிதல்கள்
அமைச்சர்களுக்கு இருக்க வேண்டும்.

தகவல் அறியும் உரிமை சட்டம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக இந்த ஒப்பந்தங்களின் பிரதிகளை ஜனாதிபதி
செயலகத்திடம் கோரிய போது, தம்வசம் அவை இல்லை என்ற பதிலே வழங்கப்பட்டது.

எதற்காக இது குறித்த தகவல்கள் மறைக்கப்படுகின்றன? எமது கேள்விக்குப்
பதிலளிப்பதற்கான சந்தர்ப்பம் இருந்தும் பிரதமர் ஏன் அதனை புறக்கணிக்கின்றார்?

அவ்வாறெனில் அரசு செய்யக் கூடாத ஒன்றைச் செய்துள்ளதா? தெரிந்தோ தெரியாமலோ
எமது தாய் நாடு காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதா?

பாராளுமன்றத்தில் இந்த ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து, அவை
குறித்த விவாதங்களை நிறைவுக்கு கொண்டு வர முடியுமல்லவா? ஆனால் அதற்கான தைரியம்
அரசாங்கத்துக்கு இல்லை.

நாடாளுமன்றத்தில் பல சந்தர்ப்பங்களில் நாம் இது குறித்து கேள்வி
எழுப்பியிருக்கின்றோம். நாடாளுமன்றத்தில் மாத்திரமின்றி பொதுமக்களும் இது
தொடர்பில் கேள்வி எழுப்புகின்றனர் என்பதை அரசும் அறியும்.

மறைக்கக் கூடியவாறான
உள்ளடக்கங்கள் இந்த ஒப்பந்தங்களில் காணப்படுகின்றமை கவலைக்குரியதாகும்.

323 கொள்கலன்கள் விவகாரத்திலும் அரசு இவ்வாறுதான் செயற்பட்டுக்
கொண்டிருக்கின்றது. அனைத்து விடயங்களிலும் தலையிடும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க
இந்த விடயத்தில் அமைதியாகவுள்ளார்.

அறிக்கையைத் தயாரித்துக் கொண்டிருப்பதாகவும், அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை
காத்திருக்குமாறும் கூறுகின்றனர். ஆனால், அந்த அறிக்கையைத் தயாரிப்பது சுயாதீன
குழு அல்ல.

அரசின் அமைச்சர்களே அந்தக் குழுவில் உள்ளனர். அவர்கள் தமக்கு ஏற்றால்போல்
அதனைத் தயாரித்துக்கொள்வர். எனவே, அதில் கூறப்படும் விடயங்களை முழுமையாக ஏற்க
முடியாது.” – என்றார். 

https://www.youtube.com/embed/OY1v0Rvawr0

NO COMMENTS

Exit mobile version