செம்மணி அகழ்வு நடவடிக்கைகளின் போது நிபுணத்துவமுடைய சர்வதேச
மேற்பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் என இலங்கை அரசிடம் கோரிக்கை
விடுத்திருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்களைச் சரியான முறையில் ஆராய்ந்தாலே நாட்டில்
நடைபெற்ற பலவிதமான சர்வதேசக் குற்றச் செயல்களுக்கான சாட்சியங்கள் வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது யாழ்ப்பாணம்
சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் அகழ்வுப் பணிகளில் முன்னிலையான பின்னர்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள்
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இரண்டு சிறிய பகுதிகளில் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற போதும்
நூற்றுக்கும் மேற்பட்ட என்புத் தொகுதிகள் மீட்கப்படுகின்ற காரணத்தால் இன்னும்
அதிக எண்ணிக்கையில் என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்படலாம் என்ற சந்தேகம்
உள்ளது.
மேலும் என்புத் தொகுதிகள் ஆழமாகப் புதைக்கப்படவில்லை. நில மட்டத்திலிருந்து
ஐம்பது சென்ரிமீற்றர் ஆழத்தில் கூட உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றமையைப்
பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இங்கு உடல்கள் புதைக்கப்பட்டிருக்கக்கூடிய
விதமானது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது. வயது குறைந்தவர்களுடைய என்புத்
தொகுதிகளும் கண்டெடுக்கப்படுகின்றன.
மேலும் செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதி மயானமாக இருப்பதனால்
ஒரு சில முறையாக புதைக்கப்பட்ட என்புத் தொகுதிகளும் கண்டறியப்படலாம். ஆனால்,
அவற்றை இலகுவாகக் கண்டறிந்து கொள்ள முடியும்.
கொக்குத்தொடுவாய், மன்னார், மாத்தளை போன்ற இடங்களிலும், 1994களுக்குப் பின்னர்
தெற்கிலே சில இடங்களில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வுடன்
சம்பந்தப்பட்ட அனுபவமுடையவர்கள் இருந்தாலும் கூட மனிதப் புதைகுழியில் இருந்து
அகழப்படும் என்புத் தொகுதிகள் பற்றிய பரிசோதனையைச் செய்வதற்கான நிபுணத்துவம்
இலங்கையில் இல்லை.
அகழ்ந்தெடுக்கப்படுபவை யாருடைய எச்சங்கள்
உலகில் ஒரு சில பல்கலைக்கழகங்களில் மாத்திரமே அந்தத்
தொழில்நுட்பம் உள்ளது.
அகழ்ந்தெடுக்கப்படுபவை யாருடைய எச்சங்கள் என்பது அடையாளம் காணப்படுவது மிக
முக்கியமானது.
அகழப்படும் என்புத் தொகுதிகளை ஆய்வுக்காக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு
அனுப்புவதற்கு முன்னர் சான்றுப்பொருள்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது போன்ற
நிபுணத்துவங்கள் கூட சர்வதேச நிபுணர்கள் இடத்தில் இருந்தே பெற வேண்டியனவாக
உள்ளன.
ஆகவே, செம்மணி அகழ்வு நடவடிக்கைகளின் போது நிபுணத்துவமுடைய சர்வதேச
மேற்பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் என இலங்கை அரசிடம் கோரிக்கை
விடுத்திருக்கின்றோம்.
இந்த விடயங்களைச் சரியான முறையில் ஆராய்ந்தாலே நாட்டில்
நடைபெற்ற பலவிதமான சர்வதேச குற்றச் செயல்களுக்கான சாட்சியங்கள் வெளிவரும்.
நல்லிணக்கத்தை நோக்கி நகர்கின்றோம் எனச் சொல்லுகின்ற அரசு இந்த உண்மைகள்
வெளிவருவதற்கு ஏற்ற சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
சர்வதேச குற்றச் செயல்களுக்கான சாட்சியங்கள் வெளி வருகின்றன. அரசு
நல்லிணக்கத்தை நோக்கி நகர்கின்றோம் எனச் சொல்கின்றபோது, எந்த நல்லிணக்கமும்
உணமையின் அடிப்படையிலேயே செய்யப்படலாம். உண்மையை மூடி மறைத்து விட்டு
நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.
சர்வதேச நிபுணர்கள்
எனவே,செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான
உண்மையும் வெளிவருவதற்குச் சகல நடவடிக்கைகளையும் அரசு செய்து கொடுக்க
வேண்டும். அதற்கான அனுமதிகளைக் கொடுக்க வேண்டும். இதனைப் பரிசோதிக்கச் சர்வதேச
நிபுணர்களை வரவழைத்து பரிசோதனைக்காகச் சர்வதேச நிபுணர்களின் கைகளில் ஒப்படைக்க
வேண்டும்.
இதற்கான ஏற்பாடுகளை நாமும் வேறு விதங்களில் செய்து
கொண்டிருக்கின்றோம்.
சர்வதேச நிபுணர்களை வரவழைத்து அவர்களுடைய கையிலே செம்மணி விடயத்தை ஒப்படைக்க
வேண்டும். என்புத் தொகுதிகள் பற்றிய பரிசோதனையை மேற்கொண்டு அறிவிக்கும்
பொறுப்பு முழுவதும் சுயாதீனமாகச் செயற்படுகின்ற சர்வதேச நிபுணர்களிடத்தே
கையளிக்கப்பட வேண்டும்.
சர்வதேச நிபுணத்துவத்தைப் பெறுவதற்கான நகர்வுகளை வேறு வழிகளிலும் மேற்கொண்டு
வருகின்றோம். வரும் நாள்களில் நீதிமன்றம் ஊடாக ஏதாவது கட்டளைகள் பெறப்பட
வேண்டிய தேவை ஏற்படின் அந்தக் கருமங்களிலும் ஈடுபடுவோம் என்றார்.
