Home உலகம் பிரித்தானிய இலங்கைத் தூதரகத்திற்கு முன் புலம்பெயர் தமிழர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

பிரித்தானிய இலங்கைத் தூதரகத்திற்கு முன் புலம்பெயர் தமிழர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

0

பிரித்தானியாவில் (UK) இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரித்து புலம்பெயர் தமிழ்மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இன்றைய தினம் (04.02.2025) பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் கீழ் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்தோடு, பிரித்தானியாவின் இலங்கை தூதரகத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் கொடியும் ஏற்றப்பட்டுள்ளது. 

ஈழத்தமிழர்களின் கரிநாள் 

இதேவேளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் சிறிலங்காவின் சுதந்திர தினம் ஈழத்தமிழர்களின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

  

இதன்போது, இலங்கையின் சுதந்திர தினம் எங்களுக்கு கரிநாள், நீங்கள் சுதந்திரம் அனுபவிக்கும் போது நாங்கள் ஒடுக்கப்படுவதா, உங்களுக்கு சுதந்திரநாள் எங்களுக்கு திண்டாட்ட நாள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே, எமது மேய்ச்சல் தரை எமக்கு வேண்டும், நிம்மதியில்லாத நாட்டில் சுதந்திரம் எதற்கு,சுதந்திரம் இல்லாத நாட்டில் சுதந்திர தினம் எதற்கு, எங்கே எங்கே உறவுகள் எங்கே உட்பட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற இந்த போராட்டங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version