தமிழர் தரப்பில் அரசியல் அந்தஸ்தை இழந்த சில தரப்பினர் மீண்டும் ஒரு அடையாளத்தை பெறவேண்டும் என்ற நோக்கத்தின் மூலம் நகர்த்தும் திட்டமிட்ட காய் நகர்தலே தமிழர் பொதுவேட்பாளர் விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் மக்களுக்காகவும், அவர்களின் அரசியல் நன்மைகளுக்காகவும் அரசியல் செய்யும் ஒரு கட்சி என்றால் அது தமிழரசு கட்சி மாத்திரமே.
காட்டிக்கொடுக்கும் அரசியல்
தமிழ் மக்களை காட்டிக்கொடுக்கும் அரசியலை ஒருபோதும் நாங்கள் மேற்கொள்வதில்லை.
மேலும், நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலானது நாட்டில் ஒரு திருப்பத்தை கொண்டுவரக்கூடியதாகும்.
கடந்த கால ஜனாதிபதி தேர்தல்கள் என்பது, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவோம், யுத்தத்தை முடித்த ராஜபக்சர்கள், தேசிய பாதுகாப்பு, நல்லாட்சி என்ற நோக்கங்கள் அடிப்படையில் வாக்கு பெறப்பட்ட தேர்தல்களாக அமைந்திருந்தது.
ஆனால், தற்போதைய தேர்தல் இலக்கு என்பது பொருளாதாரத்தை மையமாக கொண்டதாக அமைந்துள்ளது.
தமிழ் மக்களின் ஒன்றிணைவு
குறிப்பாக, எங்களுடைய தமிழ் மக்களின் ஒன்றிணைவின் மூலமே ராஜபக்சக்களின் இறுக்கமான அரசியல் நகர்வை நல்லாட்சி என்ற ஒன்றின் மூலம் தீர்க்க முடிந்தது.
இவ்வாறான ஒரு இணக்கப்பாட்டு அரசியலுக்கு வராமல் தமிழர் சார்பில் பொதுவேட்பாளர் என ஒருவர் களமிறங்கியதன் காரணமாக அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
மத்திய செயற்குழுவில் அவர் கருத்துக்களை முன்வைத்தபின்னர் உரிய தீர்மானம் எடுக்கப்படும்.
சொல்லப்போனால் தமிழரசு கட்சியின் தீர்மானத்தையே மக்கள் எதிர்பார்கின்றனர்” என்றார்.