Home உலகம் ஈரான் எண்ணெய் வர்த்தகம் முடக்கம்…! ட்ரம்பின் அதிரடி உத்தரவு

ஈரான் எண்ணெய் வர்த்தகம் முடக்கம்…! ட்ரம்பின் அதிரடி உத்தரவு

0

ஈரானிய எரிபொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக பயன்படுத்தப்படும் 29 கப்பல்கள் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள் அனைத்தின் மீதும் அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

முறைகேடான கப்பல் போக்குவரத்து நடைமுறைகள் மூலம் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களைக் கடத்தியதாக குற்றம் சாட்டியே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்துள்ளது.

shadow fleet என அடையாளப்படுத்துகின்ற எண்ணெய் நிறுவனங்களில் இருந்து ஏற்றுமதிகளை முன்னெடுக்கும் கப்பல்களுக்கே அமெரிக்கா இவ்வாறு தடை விதித்துள்ளது.

அமெரிக்கா குற்றம்

இது தொடர்பில் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “குறித்த கப்பல்கள் அனைத்தும் காலாவதியானவை, அவைகளின் உரிமையாளர் யார் என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

எண்ணெய் நிறுவனங்களுக்கும் பல துறைமுகங்களுக்கும் தேவையான சர்வதேச தரநிலைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான உயர்தர காப்பீட்டுப் பாதுகாப்பு இல்லாமல் செயல்படுபவை” என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கிடையில் ஈரானின் இராணுவ மற்றும் ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தும் பெட்ரோலிய வருவாய் தொடர்ந்து முடக்கப்படும் என அமெரிக்க கருவூலத் துறை குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் மத்திய கிழக்குப் பகுதி முழுவதும் பயங்கரவாதப் பிரதிநிதிகளுக்கு ஈரான் அளிக்கும் ஆதரவு ஆகிய காரணங்களுக்காக ஈரான் மீது தடைகளை விதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version