பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் தலைமைத் தகுதி குறித்த கேள்விகள் லேபர் கட்சிக்குள் தீவிரமடைந்துள்ளன.
அண்மையில் துணை பிரதமர், அமெரிக்க தூதர் மற்றும் மூலோபாயத் திட்டத் தலைவர் பதவி விலகியதையடுத்து, ஸ்டார்மர் தனது இரண்டாம் கட்ட அரசியல் திட்டங்களை முன்னெடுக்க முயன்ற போதும், கட்சிக்குள் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன.
லேபர் கட்சியின் சில உறுப்பினர்கள், ஸ்டார்மர் தனது கொள்கைகளையும் அணுகுமுறையையும் மாற்றாவிட்டால், அவரை பதவியிலிருந்து நீக்குவது தவிர்க்க முடியாத நிலைக்கு செல்லும் என்று எச்சரித்துள்ளனர்.
மாற்று வேட்பாளர்
எனினும், அவருக்குப் பதிலாக தகுந்த தலைமை மாற்று வேட்பாளர் இப்போது இல்லாததால், அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Greater Manchester மேயர் ஆன்டி பர்ன்ஹாம், சுகாதார செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங், முன்னாள் தலைவர் எட் மிலிபாண்ட் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. ஆனால் இவர்களில் யாரும் கட்சியின் முழுமையான ஆதரவைப் பெற முடியும் என்ற நம்பிக்கை இல்லை.
ஸ்டார்மரின் ஆதரவாளர்கள், வரும் மே மாத உள்ளாட்சி தேர்தலுக்கு முன் அவரது செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
பொதுமக்களின் ஆதரவு
அத்துடன், வரவிருக்கும் லேபர் கட்சி மாநாட்டில் குழந்தை நல நிவாரணங்கள், வடக்கு இங்கிலாந்தில் ரயில் திட்டங்கள் போன்ற புதிய கொள்கை அறிவிப்புகள் மூலம் பொதுமக்களின் ஆதரவை மீட்டெடுக்க முயற்சி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்காலிகமாக மாற்று தலைவர்களின் பற்றாக்குறை ஸ்டார்மருக்கு பாதுகாப்பாக இருந்தாலும், தொடர்ந்து மேலும் பதவி விலகல்கள் ஏற்பட்டால், அவரது தலைமையின் நிலைமை ஆபத்துக்குள்ளாகும் அபாயம் அதிகம் என அரசியல் வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
