ரஷ்ய (Russia) ஜனாதிபதி புடின் (Vladimir Putin) உக்ரைனுக்கு (Ukraine) அடுத்தபடியாக மற்றொரு ஐரோப்பிய நாட்டின் மீது கண் வைத்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை அமெரிக்க இராணுவத்தில் ஜெனரலாக பதவி வகித்தவரும், மத்திய உளவுத்துறை ஏஜன்சியின் முன்னாள் இயக்குநருமான ஜெனரல் டேவிட் (General David Petraeus) விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, புடினுடைய நோக்கம் உக்ரைனின் சில பகுதிகளைக் கைப்பற்றுவது அல்ல எனவும் அவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்ய கைப்பாவை
முழு உக்ரைனையும் கைப்பற்றி, உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கியின் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, ரஷ்ய கைப்பாவையாகிய ஒருவரை உக்ரைன் ஜனாதிபதியாக ஆக்குவதுதான் புடினுடைய திட்டம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, புடின் உக்ரைனுடன் நிறுத்தமாட்டார் எனவும் அடுத்ததாக அவர் மற்றொரு ஐரோப்பிய நாட்டின் மீது குறிவைத்துள்ளார் எனவும் ஜெனரல் டேவிட் தெரிவித்துள்ளார்.
ஆற்றிய உரை
புடினுடைய பேச்சில் அடிக்கடி இடம்பெறும் ஒரு நாட்டின் பெயர் லிதுவேனியா என தெரிவித்த அவர், லிதுவேனியா ரஷ்யாவுடனான ஆற்றல் தொடர்புகளை துண்டித்துவிட்டு, உறுதியாக உக்ரைனுக்கு ஆதரவளிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், லிதுவேனியா முதலான நாடுகளுக்கு நேட்டோ தீவிரமாக உதவவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2005 ஆம் ஆண்டு புடின் நாட்டுக்கு ஆற்றிய உரையின் போது, சோவியத் யூனியனின் வீழ்ச்சி ரஷ்ய மக்களுக்கு ஒரு துயரமான விடயம் என தெரிவித்து இருந்தார்.
புடினால் அபாயம்
அத்தோடு, என்ன பேசினாலும் சோவியத் யூனியன் என்னும் ஒரு விடயம் அவரது பேச்சில் இடம்பெற்றுவிடுகிறது என ஜெனரல் டேவிட் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், முன்னர் சோவியத் யூனியனிலிருந்த நாடுகளை மீண்டும் இணைத்து சோவியத் யூனியனை உருவாக்கும் எண்ணம் புடினுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், பால்டிக் நாடுகள் என அழைக்கப்படும் எஸ்தோனியா, லாத்வியா மற்றும் லிதுவேனியா போன்ற நாடுகளுக்கு புடினால் அபாயம் உள்ளது என்பதையே ஜெனரல் டேவிடின் எச்சரிக்கை சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
