அடுத்த 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பொருளாதாரச் சிரமங்களைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு 6000 ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார சிரமம்
கடந்த பொருளாதார நெருக்கடியின் போது, 55% க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் மிகவும் பாதகமான பொருளாதார சிரமங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும், கிராமப்புற மற்றும் பெருந்தோட்டப் பாடசாலைகளில் இந்த நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்களில் 53% க்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலை எழுதுபொருட்களை வாங்குவதைக் குறைத்துள்ளதாகவும் 26% க்கும் அதிகமானோர் ஏற்கனவே பயன்படுத்திய எழுதுபொருட்களை மீண்டும் பயன்படுத்துவதை நாடியுள்ளனர் என்று மக்கள் தொகை மற்றும் புள்ளி விபர திணைக்களித்தின் ஆய்வு அறிக்கைகள் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தகுதியுடைய மாணவர்கள்
இதன்படி, பொருளாதாரச் சிக்கல்களால் மாணவர்களில் கல்வியில் ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தை குறைக்கும் வகையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்த கொடுப்பனவை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்த கொடுப்பனவை பெற 5 முதல் 18 வயதுக்குட்பட்ட ஒரு இலட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தகுதியுடையவர்கள் எனவும், அதற்கான 6500 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு இடைக்கால வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி மேலும் தெரிவித்துள்ளார்.