முன்னைய அரசாங்கம் முஸ்லிம் மக்களை இலக்காகக்கொண்டு இனவாத அடிப்படையில் செயற்பட்டு சடலங்களை எரிப்பதற்கு தீர்மானித்திருந்ததாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றில் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தமையை சுட்டிக்காட்டி அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (18) அதிபர் ஆற்றிய விசேட உரையில், கொரோனா தொற்றில் மரணித்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கு எடுத்த தீர்மானம் போன்று எதிர்காலத்தில் அவ்வாறான பிழையான தீர்மானங்களை தவிர்க்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பு
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “கொரோனா தொற்றில் மரணிக்கும் சடலங்களை எரிக்க வேண்டும் என அப்போது இருந்த அரசாங்கம் விசேட நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தது.
கொரோனா தொற்றில் மரணிக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில் அரசாங்கம் எரிப்பதற்கு எடுத்த தீர்மானம் மிகவும் கீழ்த்தரமான செயல்.
மக்களின் உரிமை
எமது நாட்டின் முஸ்லிம் மக்களின் உரிமையை மீறி இவ்வாறு சடலங்களை எரிக்க எடுத்த தீர்மானம் அடிப்படை உரிமையை மீறும் செயல்.
இது ஒரு இனத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. இந்த நடவடிக்கைக்கு எதிராக அப்போது இருந்த அரசாங்கத்தின் மிக மோசமான இந்த தீர்மானத்துக்கு எதிராக ஆரம்பமாக வீதிக்கு இறங்கி போராடியது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியாகும்.
அதனால் நாட்டின் ஒரு இனத்துக்கு மாத்திரம் எதிராக திட்டமிட்டு, இனவாதமாக செயற்படும் வகையில், கொரோனா தொற்றில் மரணித்தவர்களை எரிக்க வேண்டும் என தீர்மானம் மேற்கொண்டவர்கள் யார் என்பதை தேடிப்பார்த்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிபரை கேட்டுக்கொள்கிறேன்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.