எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி நாட்டில் உள்ள தமிழ், முஸ்லிம்,
மலையக சிறுபான்மை சமூகங்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக தமிழ் பேசும்
சிறுபான்மை பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்று உற்பத்தி திறன்
ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள்
தவிசாளரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று (18) வழங்கிய செய்தி குறிப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பெரும்பான்மை
“வரவுள்ள ஜனாதிபதி தேர்தல் பேசுபொருளாக மாறியிருக்கின்றது. பெருந்தேசிய
கட்சிகளின் உத்தேச வேட்பாளர்கள் வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகியவற்றுக்கு வந்து
சிறுபான்மை சமூகங்களின் ஆதரவை கோரி நிற்கின்றனர்.
இத்தேர்தல் முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு மிக பிரமாண்டமான போட்டியாக
விஷ்வரூபம் எடுக்க இருக்கின்றது.
எந்தவொரு வேட்பாளரும் தனிபெரும்பான்மையுடன்
வெற்றி பெறுவது என்பது கல்லில் நார் உரிப்பது போல கடினமாக இருக்கும்.
அதற்கும் அப்பால், எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளை பெற வேண்டுமாயின்
உச்ச பட்ச பகீரத பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்றால்
மிகையாகாது.
இலங்கையில் சிறுபான்மை சமூகங்களில் இருந்து ஜனாதிபதி ஒருவர் தோற்றம் பெற
முடியாது. ஆனால் ஜனாதிபதி யார்? என்பதை தீர்மானிக்கின்ற சக்தியாக சிறுபான்மை
சமூகங்கள் மாற முடியும்.
அதற்கான வாய்ப்பு வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கண் முன் தெரிகின்றது. எனவே
இவ்வாய்ப்பை சரியான தருணமாக பயன்படுத்தி தமிழ், முஸ்லிம், மலையக மக்களின்
ஒட்டுமொத்த பிரதிநிதியாக தமிழ் பேசும் சிறுபான்மை பொது வேட்பாளர் ஒருவரை
தேர்தலில் நிறுத்த வேண்டும்.
அவர் தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும்
வென்றவராக விளங்க வேண்டும்.
மக்களாணை
நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நீண்ட
அரசியல் அனுபவம் நிறைந்த ஆற்றல் மிக்கவராக திகழ வேண்டும்.
சிங்கள முற்போக்கு சக்திகளின் ஆதரவை பெற கூடியவராகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறான ஒரு தமிழ் பேசும் சிறுபான்மை பொது வேட்பாளரை தேர்தலில் நிறுத்துவது
தொடர்பாக சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள்,
பொதுநல செயற்பாட்டாளர்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தி தீர்க்கமான தீர்மானத்தை எட்ட வேண்டும்.
தமிழ் பேசும் சிறுபான்மை பொது வேட்பாளருக்கு சிறுபான்மை சமூகங்களின்
மக்களாணை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்த வியூகம் காலத்தின் கட்டாயம் ஆகும்.
இந்த வியூகத்தின் வெற்றி மூலமாக அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்கி
எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகங்களுக்கான உரிமைகள், இருப்பு, பாதுகாப்பு
ஆகியவற்றை வென்றெடுப்பதற்கும், தக்க வைப்பதற்குமான மார்க்கத்தில் முன்னோக்கி
பயணிக்க வேண்டும்.
போருக்கு பின்னரான இலங்கையில் சிறுபான்மை தேசிய இனங்களை அரசியல் அடிப்படையில்
இணைப்பதற்கான பொன்னான வரலாற்று வாய்ப்பாகவும் இத்தேர்தலை பயன்படுத்த
வேண்டியுள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.