தேர்தல் அண்மிக்கின்றமையால் எதிர்கட்சி தலைவர், வடக்குக்கு சென்று 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில், நாடகமாடுகின்றார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் வடக்கு விஜயத்தின்போது தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த தருணத்தில்தான் வடக்கு கிழக்கு மக்கள் மீது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவுக்கும் திடீர் கரிசனைகள் ஏற்பட்டுள்ளன.
வடக்கு – கிழக்கு மக்கள்
இவர்கள் கடந்த காலத்தில் வடக்கு, கிழக்கு மக்கள் சம்பந்தமாக எந்தவிதமான கவனத்தையும் கொண்டது கிடையாது.
அந்த மக்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் கூட திரும்பிப் பார்த்தது கிடையாது.
குறிப்பாக, ஜே.வி.பி. 13ஆவது திருத்தத்துக்கு எதிராக இதுகாலம் வரையிலும் தமது கடுமையான எதிர்ப்பினையே வெளியிட்டு வந்தார்கள்
அது நடைமுறைப்படுத்தக்கூடாது என்பதைக்காக படுகொலைகளைக் கூடச் செய்தார்கள்.
அத்தகையவர்களுக்கு 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக பேசுவதற்கு எந்தவிதமான அருகதையும் இல்லை.
அதேபோன்று தான் சஜித் பிரேமதசவும் 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைளின்போது எந்தவிதமான ஒத்துழைப்புக்களையும் செய்யாதே இருந்தார்.
மேலும், தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் வடக்கு மக்களிடத்தில் சென்று 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதாகவும் அதுபற்றி உரையாடுவதாகவும் கூறுகிறார்” என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.