நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமிழ்க் கட்சிகளின் ஆதரவு குறைவாக இருந்தாலும், தேர்தல் நாளில் இலங்கைத் தமிழர்கள் அவரை ஆதரிப்பார்கள் என கட்சி தரப்புக்களில் இருந்து எதிர்வுகள் வெளிவருகிறது.
தமிழ்க் கட்சிகளின் ஆதரவைப் பொருட்படுத்தாமல் ரணில் நேரடியாக தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து தமிழ் வாக்குகளை அறுவடை செய்ய முயற்சித்து வருவது வெளிப்படையாகிறது.
வடக்கின் முக்கிய கட்சியான தமிழரசுக்கட்சியில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஒரு தரப்பும், தமிழ் பொது வேட்பாளரான பா. அரியநேத்திரனை ஆதரிக்க ஒருதரப்பும் முன்வந்துள்ளன.
இந்த பிளவு பட்ட நிலைப்பாடு என்பது ரணிலுக்கு சாதகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு நாட்டின் அரியாசனத்தில் அமர ரணில் எவ்வாறான ராஜதந்திரத்தை கையாண்டார் என சுமந்திரன் நாடாளுமன்றில் மற்றும் பல நேர்காணல்களில் வெளிப்படுத்தியிருந்தார்.
அப்படி என்றால் தமிழரசுக்கட்சி பிளவு பட்டிருப்பது ரணிலின் திட்டமிடலுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்ப்புகளும் மேலோங்கியுள்ளன.
சுமந்திரன் அணியின் தீர்மானம்
வடக்கு – கிழக்கின் முக்கிய அரசியல் தரப்புக்கள் பொதுவேட்பாளருக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ள நிலையில், தமிழரசு கட்சி சஜித்தை ஆதரித்துள்ளது.
அதில் இது சுமந்திரன் அணியின் தீர்மானம் எனவும் மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முதலாவதாக ஒவ்வொரு கட்சியும் கூறுவதை போல மக்களின் வாக்குகளை பெறமுடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
கணிசமான எண்ணிக்கையிலான தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் தங்களுடைய வலுவான நிலைப்பாடு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
அவர்கள் சுயமாக வாக்களிப்பார்கள் என்பதற்கான தெளிவான குறிகாட்டிகள் அவர்களின் நிலைப்பாடுகளில் வெளியாகிறது.
ரணில் விக்ரமசிங்க தனக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் தனக்கென ஒரு ஆதரவு தளம் உள்ளது என்று பகிரங்கமாக கூறி வருகின்றார்.
செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் தேசிய காங்கிரஸ் இந்தக் கட்சிகளுக்கு மேலதிகமாக ரணிலுக்கு ஆதரவாக சில தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்தக் கட்சிகளின் ஆதரவு இருந்தபோதிலும், ஜனாதிபதியை ஆதரிப்பதை விட எதிர்க்கட்சித் தலைவரை ஆதரிக்கும் கட்சிகள் பலமுடையதாக இருப்பதால் சிறுபான்மை சமூகங்களின் வாக்குகளைப் பெறுவதில் ரணில் விக்ரமசிங்கவை விட சஜித் பிரேமதாசவுக்கு சாதகமாகும் என அவரின் ஆதரவாளர்களால் கூறப்படுகிறது.
எனினும் , இந்த கட்சிகள் வழங்கும் ஆதரவு முற்றிலும் ஒன்றுபட்டதாக அமையவில்லை.
வடக்கு கிழக்கு தமிழர்கள்
எம்.பி.க்கள் உட்பட சில செல்வாக்கு மிக்க கட்சியின் சில உறுப்பினர்கள் தங்கள் கட்சித் தலைவர்களை மீறி ரணிலுக்கு ஆதரவை அறிவித்துள்ளனர்.
இலங்கையின் சிறுபான்மை சமூகத்தை அதிகம் கொண்டுள்ள மற்றும் மூன்று சிறுபான்மை சமூகங்களும் காணப்படுகின்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாக்குகள் தேர்தலின் போக்கை மாற்றக்கூடியவை.
கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் வடக்கு கிழக்கு தமிழர்களும் சிறுபான்மையினராக உள்ளனர்.
இவர்களின் தமிழர்களை பொருத்தமட்டில் முதன்மையான அரசியல் அமைப்பு சமீப காலம் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அடிப்படையாக கொண்டதே.
2020 தேர்தலில் பத்து ஆசனங்களை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது பிளவுபட்டுள்ளது.
அதன் மூன்றில் இரண்டு ஆதரவு கொண்ட டெலோ, புளொட் மற்றும் ஈபிஆர்எல்எப் உட்பட மற்ற மூன்று கட்சிகளுடன் சேர்ந்து ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (டிடிஎன்ஏ) என்ற புதிய கூட்டணியை உருவாக்குகின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இப்போது தனித்து நிற்கிறது.
2022 நாடாளுமன்றில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அப்போதைய ஐக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது.
எனினும் பத்து எம்.பி.க்களில் நான்கு பேர் மட்டுமே டலஸுக்கு வாக்களித்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் காணப்படுகின்றன.
தனிப்பெரும் கட்சி
இதன் முடிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் தனக்கு வாக்களித்ததாக ரணில் சூசகமாகத் தெரிவித்தார்.
இந்த போக்குகளின் நிலைப்பாட்டின் அடிப்படையில் தற்போது , நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியான இலங்கைத் தமிழர் கட்சி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
இது சஜித்துக்கு மன உறுதியும், ரணிலுக்கு பெரும் அடியும் என கூறப்பட்டது.
ஆனால் சுமந்திரன் கூறுவதை போல ராஜதந்திர நிலைப்பாட்டுடன் நகரும் ரணில் நகர்ந்தது என்னவோ தமிழரசு கட்சியின் தலைவரை நோக்கி.
தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ரணிலுக்கு பொன்னாடை வரவேற்ப்பு வழங்கியமையும், அவரின் வெற்றிக்கு வாய்ப்பு உள்ளது என கூறியமையும் சிறுபான்மை வாக்குவேட்டையில் ஒரு இராஜதந்திர காய் நகர்வு.
முன்னர் கூறியது போல சிறுபான்மை மக்கள் வாக்குறுதியை தாண்டி, சுயமாக சிந்திக்கும் நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் .
அதன் வெளிப்பாடு இம்மாதம் 22ஆம் திகதி வெளிப்படையாகும் என்பதே நிதர்சனம்…