தேசிய தேர்தல் ஆணையகம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எழுதியதாக
கூறப்படும் ஒரு செய்தி தொடர்பாக அரச தகவல் திணைக்களம், விளக்க அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளது.
அதில், குறித்த செய்தி தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளதாக அரச தகவல்
திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று ஒரு உள்ளூர் செய்தித்தாள் ஒன்றின் தலைப்புச் செய்தியை கோடிட்டுள்ள, அரச
தகவல் திணைக்களம், தேர்தல் ஆணையகத்தால், ஜனாதிபதிக்கு அத்தகைய கடிதம் எதுவும்
அனுப்பப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
செய்தித்தாள் வெளியிட்ட தகவல்
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான அரசியல் மேடையில் ஜனாதிபதி, தேர்தல் சட்டங்களை
மீறியதாகக் கூறி தேர்தல் ஆணையகத்தில் முறையிடப்பட்டதாக குறித்த செய்தித்தாள்
தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படாத
உள்ளூராட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என்ற ஜனாதிபதியின் அறிக்கை
குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளதாக குறித்த
செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
செய்தி தவறானது
இந்த நிலையில், நாட்டின் நிதியமைச்சரான ஜனாதிபதியின் அறிக்கை தேர்தல்
சட்டங்களை மீறுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தேர்தல் ஆணையத்திடம்
தெரிவித்ததாக அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தேர்தல் ஆணையகத்தால்
ஜனாதிபதிக்கு அத்தகைய கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை என்றும், அந்த செய்தி
தவறானது என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேசிய தேர்தல் ஆணையகம் இதுவரை குறித்த ஊடக அறிக்கைக்கு
பதிலளிக்கவில்லை.

