சர்வதேச நாணய நிதியத்திடம் அனுமதி பெறுவதற்கு முன்னர், 25 பில்லியன் ரூபாய்
இழப்பை ஈடுசெய்யும் வகையில் அரசாங்கம் மின்சார கட்டணங்களை திருத்த வேண்டும்
என்று திறைசேரியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த மதிப்பாய்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது.
ஆனால், அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டங்கள் அடுத்த மாதத்திற்குள் அனுப்பப்பட
வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இரண்டு நிபந்தனைகள்
சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் நிலை ஒப்பந்தம் இரண்டு நிபந்தனைகளை
அடிப்படையாகக் கொண்டது,
அவற்றில் ஒன்று மின்சார செலவை மீட்டெடுப்பது மற்றும் மின்சார கட்டண
பொறிமுறையின் சரியான செயல்பாட்டை உறுதி செய்வது என்பனவாகும்.

இந்தநிலையில், சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழுவின் நிபந்தனைகள் மற்றும்
ஒப்புதலுக்குப் பிறகுதான், இலங்கை சுமார் 344 மில்லியன் டொலர் நிதியுதவியை
பெற்றுக் கொள்ள முடியும்.
இதனை விடுத்து, திட்டங்களை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கத் தவறினால், சர்வதேச
நாணய நிதியத்தின் திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படும்
அத்துடன், பிற நாடுகளிலிருந்து கடன்களைப் பெறுவது போன்ற பல சிக்கல்களை
ஏற்படுத்தக்கூடும் என்று திறைசேரியின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பிற பொருளாதார நிறுவனங்களின் மதிப்பீடுகள் குறையக்கூடும், மேலும் இது
நாட்டிற்குள் வரும் முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.

